EBM News Tamil
Leading News Portal in Tamil

விபத்தை தடுக்கும் செயலி – உதகை பொறியாளர் அசத்தல் | Crash Prevention App – Ooty Engineers Awesome


உதகை: உதகை பொறியாளரால், வாகனங்கள் விபத்தில் சிக்காமல்இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கை செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் சாலை பாதுகாப்பு வாரம் கடை பிடிக்கப்படுகிறது. தனி நபர்கள், பள்ளிகள், மற்றும் பொது நிறுவனங்களை ஒன்றிணைத்து, சாலைகளை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றுவதில் ஒவ்வொரு வரும் ஆற்றக் கூடிய பங்கை முன்னிலைப்படுத்தும் வாரம் இது. சாலை பாதுகாப்புத் தொண்டு நிறுவனமான பிரேக் மூலமாக சாலைப் பாதுகாப்பு வாரம் தொடங்கப்பட்டது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆண்டு முழுவதும் தேவையற்ற இறப்புகள் மற்றும் காயங்களை தடுக்கவும் முனைப்பு காட்டப்படுகிறது. சாலைகளை விபத்தில்லாமல் பாதுகாப்பாக மாற்ற புதிய முயற்சிகள், புதிய பங்கேற்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தகைய ஒரு முன்னெடுப்பை உதகையை சேர்ந்த பொறியாளர் எம்.ஆனந்த் எடுத்துள்ளார். அவரது நிறுவனமான நீலகிரி மாவட்டம் லேம்ஸ் ஆட்டோ மேஷன் மூலமாக, முதன் முறையாக இரவு நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கும் போது ஓட்டுநர்கள் உறங்குவதால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், ஓட்டுநர்களை எச்சரிக்கை செய்யும் புதிய செயலியை உருவாக்கியுள்ளார்.

ஆனந்த்

லேம்ஸ் ஆட்டோ மேஷன் நிறுவனத்தை நிறுவியுள்ள ஆனந்த், 3டி பிரிண்டர் மூலமாக உபகரணங்கள் உருவாக்குவது உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது கனரக வாகன ஓட்டுநர்கள் விபத்தில் சிக்காமல் இருக்கும் வகையில், ‘இந்தியன் பிரைட் குரு’ என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளார்.

இது தொடர்பாக எம்.ஆனந்த் கூறும்போது, “உலகம் முழுவதும் கனரக வாகனங்கள் அதிகளவு இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் கனரக வாகனங்கள்அவ்வப்போது விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனங்களை இயக்கும் போது, தங்களை அறியாமலேயே ஓட்டுநர்கள் உறங்குவதால் அதிக அளவு விபத்து ஏற்பட்டு, விலை மதிப்பற்ற மனித உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இதை தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் பல்வேறு செயலிகள் நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் இத்தகைய செயலியை அறிமுகம் செய்ய வேண்டுமென்ற நோக்கில், இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் பொருத்தப்படும் கருவி மூலமாக, வாகன ஓட்டுநர்களின் விழி மற்றும் அசைவுகள் பதிவு செய்யப்படும். அங்கிருந்து ஜிபிஎஸ் மூலமாக சர்வருக்கு பதிவுகள் அனுப்பப்படும்.

ஓட்டுநரின் அசைவுகளில் வித்தியாசம் தெரிந்தால், ஓட்டுநருக்கு எச்சரிக்கை செய்யப்படும். மேலும், நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் போது, இந்த செயலி மூலமாக தீயணைப்பு மற்றும் மீட்பு, காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் முதலுதவி வாகனங்களுக்கு தகவல் அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக, பல விபத்துகளை தவிர்க்கலாம்” என்றார்.