மதுபோதையில் தாயம் விளையாடிய நண்பர்கள் – கல்லால் தாக்கியதில் கூலித்தொழிலாளி பலி
மது போதையில் தாயம் விளையாடிய நண்பர்களுக்குள் வாக்குவாதம் முற்றி சக நண்பர் கல்லால் தலையில் தாக்கியதால் பலத்த காயமடைந்த கூலி தொழிலாளி பலி.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ராயன் கோயில் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (43). கூலித் தொழிலாளியான இவர் கருத்து வேறுபாட்டால் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சாலையோரம் வசிக்கும் சிலருடன் இணைந்து இவரும் சாலையோரம் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு அவிநாசி மங்களம் சாலை பைபாஸ் பாலத்தின் கீழ் மது போதையில் நண்பர்களுடன் தாயம் விளையாடியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சக நண்பர் கல்லால் தலையில் தாக்கியதால் பலத்த காயமடைந்ததார். இதனை கண்ட நண்பர்கள் அவரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி சென்றனர். அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் ஜெகநாதனை அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, ஜெகநாதன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 4 பேரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சாலையோரம் வசிக்கும் நபர்கள் என்பதால் பெயர் உள்ளிட்ட தகவல்களை சேகரிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.