இந்த கருவியை பொருத்தாவிட்டால் மின் இணைப்பு வழங்கப்படாது – மின்சார துறை அதிரடி
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் பகிர்மான விதித்தொகுப்புகளில் புதிய விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. மின்பழுது மற்றும் மின்கசிவால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் விதமாக வீடுகள், கடைகள், பூங்காக்களில் Residual current device என்ற சாதனத்தை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருமுனை, மும்முனை மின் இணைப்புகளிலும், தற்காலிக மின் இணைப்புகளிலும் இந்த சாதனத்தை பொருத்த வேண்டும் என்றும், இக்கருவியின் மின்கசிவை உணரும் திறன் 30 மில்லி ஆம்பியருக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 கிலோ வாட்டுக்கு மேல் மின்சாதனங்களை பயன்படுத்தும் பேரங்காடிகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளில் மின்கசிவால் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் வகையில், அந்தந்த வளாகங்களில் மின் இணைப்பு மொத்தமாக தொடங்கும் இடத்தில், 300 மில்லி ஆம்பியர் அளவுக்கான மின் கசிவை உணரும் திறன் கொண்ட ஆர்சிடி சாதனத்தை பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின் பளுவின் அளவை பொறுத்து பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மின்சுற்றிலும் தனித்தனியாக ஆர்சிடி கருவியை பொருத்துவது அவசியம் எனவும், இதன் மூலம் கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மின் பழுதால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக மின் இணைப்பு கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும் உயிர்காக்கும் சாதனத்தை மின் இணைப்பு கோரும் கட்டடத்தில் நிறுவி, விண்ணப்ப படிவத்தில் உறுதியளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மின் இணைப்பு வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.