தமிழகத்தில் கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லாத 3 மாவட்டங்கள்…!
தமிழகத்தில் கடந்த 14 நாட்களில் ராணிப்பேட்டை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் புதிய கொரோனா வைரஸ் தொற்று எதுவும் கண்டறிப்படவில்லை.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் கடந்த 14 நாட்களில் 816 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், சென்னையைத் தவிர 35 மாவட்டங்களில் 357 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 14 நாட்களில் தமிழகத்தில் பதிவான தொற்றில் 54.25 சதவீதம் சென்னையில் பதிவாகி உள்ளது. தொடக்கம் முதலே சென்னையில்தான் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்தது. அதிலும், கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்திருக்கிறது.
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 17 நாட்களாகவும், ராணிப்பேட்டையில் 15 நாட்களாகவும், கன்னியாகுமரியில் 14 நாட்களாகவும் நோய் தொற்று கண்டறியப்படவில்லை.
அதேபோல், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக தொற்று பரவல் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் 70 பேர் கொரோனோ தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்திருந்தார். மீதமுள்ள 69 பேரும் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் தொற்று பாதிக்கப்பட்டோர் இல்லாத மாவட்டமாக ஈரோடு உள்ளது.இதுதவிர, வேலூர், கரூர், தேனி ஆகிய மாவட்டங்களில் 11 நாட்களாகவும் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.அதேபோன்று கடலூரில் 9 நாட்களாகவும், தூத்துக்குடி, நாகப்பட்டினம், சிவகங்கை, புதுக்கோட்டையில் 8 நாட்களாகவும் கொரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. அதேபோல், கிருஷ்ணகிரியில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.