EBM News Tamil
Leading News Portal in Tamil

ஊரடங்கிற்குப் பின்னரும் 77 பேருக்கு நேரடி தொற்று…! தமிழகத்தில் சமூகப் பரவல் தொடங்கியுள்ளதா…?

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு நேரடி தொற்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இது சில மாவட்டங்களில் சமூக தொற்று தொடங்கிவிட்டுள்ளதா என்ற சந்தேக்த்தை வலுப்படுத்தியுள்ளது.

கடந்த 12ம் தேதி முதல் தமிழகத்தில் 459 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 382 பேர் தொற்று பெற்றவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததால் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், 77 பேர் நேரடியாக புதிதாக தொற்று பெற்றவர்கள் ஆவார்கள்.

இந்த 77 பேருக்கு ஊரடங்கின் 21 நாட்களுக்கு பிறகும் நேரடி தொற்று பெற்றிருப்பது ஆபத்தை உணர்த்தும் செய்தியாகும்.

கொரோனா பாதிப்பு தொடங்கிய நேரத்தில் யார் எந்த நாட்டுக்கு சென்று வந்ததன் மூலம் தொற்று ஏற்பட்டது என்ற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டது. ஆனால் அதன் பிறகு தகவல்கள் வெளிப்படையாக இல்லை.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு வெளிநாடு செல்பவர்கள், வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் யாரும் கிடையாது. தமிழ்நாட்டிலும் வெளியூர் செல்பவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு. மாவட்ட நிர்வாகத்தின் பாஸ் பெற்று திருமணம், இறப்பு, மருத்தவ அவசர தேவைகளுக்கு மட்டுமே செல்ல முடியும்.

வைரஸ் உடலில் வந்து அறிகுறிகள் தெரிய அதிகபட்சம் 14 நாட்கள் ஆகும். மிக மிக அரிதான நேரத்தில் மட்டுமே 14 நாட்களுக்கு மேல் ஆகும். ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 21 நாட்கள் கழித்து ஏப்ரல் 12ம் தேதி 16 பேருக்கு நேரடியாக தொற்று ஏற்பட்டுள்ளது. 13ம் தேதி 9 பேருக்கு, 14ம் தேதி ஒருவருக்கு, 15ம் தேதி 16 பேருக்கு, 16ம் தேதி 7 பேருக்கு, 17ம் தேதி 15 பேருக்கு நேரடி தொற்று உறுதியானது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 28 நாட்கள் கழித்தும்19ம் தேதி 13 பேருக்கு நேரடியாக தொற்று ஏற்பட்டதாக சுகாதாரத்துறை கூறுகிறது.

77 பேரில் 17 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 11 பேர் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள், திருவள்ளூர், நாகப்பட்டினம், மதுரையிலும் தலா 7 பேர் உள்ளனர். இவ்விபரங்கள் கூடுதல் எச்சரிக்கை தேவை என உணர்த்துகின்றன