இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் மாவட்டங்கள்..! – முழு விவரம்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து வருகிறது எனினும், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் தீயாய் பரவி வருகிறது. கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கியுள்ள அந்த மாவட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமடைந்துள்ள போதும், மும்பையில் கொரோனாவின் உக்கிரம் மிகக்கடுமையாகவே உள்ளது. மும்பையில் மட்டுமே 2120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 122 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அறிகுறிகளுடன் உள்ளவர்கள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்ட 5 நாட்களுக்கு பிறகே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இனிமேல் அடையாளம் கண்டறியப்பட்ட உடனே சோதனை மேற்கொள்வது என மும்பை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் மும்பைக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக புனே மாவட்டம் உள்ளது. புனேவில் இதுவரை 568 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 48 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பரவலை கட்டுக்குள் கொண்டு வர கண்காணிப்பையும், பரிசோதனைகளையும் தீவிரப்படுத்த உள்ளதாக புனே மாநகர சுகாதார அதிகாரி சஞ்சீவ் வவரே (Sanjeev Wavare) தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இந்தூர் மாவட்டத்தில் மட்டுமே 892 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு 69 ஆன நிலையில், இந்தூரில் மட்டுமே 47 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு உச்சமடைந்துள்ள நிலையில் 155 பகுதிகள் கட்டுபபாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன,
இந்தூரைச் சேர்ந்த 26 லட்சம் பேரையும், வீடுவீடாக சென்று ஒரு வாரத்திற்குள் பரிசோதிப்பது என மத்திய பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்தூரில் உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் 3 பேர் முகாமிட்டு, நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.குஜராத் மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், அகமதாபாத்தில் மட்டுமே 622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்த 41 பேரில், 25 பேர் அகமதாபாத்தை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீவிரமாக பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தப்படும் என அகமதாபாத் மாநகராட்சி ஆணையர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெய்ப்பூரில் மட்டும் 481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்துள்ள நிலையில், அதே மாதிரியை பின்பற்றி ஜெய்ப்பூரிலும் பரிசோதனைகளை தீவிரப்படுத்தி, கண்காணிப்பை பலப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 70 ஆயிரம் மக்களைக் கொண்ட 7 பகுதிகளாக ஜெய்ப்பூரை பிரித்து, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட உள்ளன.