EBM News Tamil
Leading News Portal in Tamil

கொரோனா ஹாட்ஸ்பாட் – தீவிர கண்காணிப்பில் 170 மாவட்டங்கள்: தமிழகம் முதலிடம்..!

நாடு முழுவதும் கொரோனாவால் 170 மாவட்டங்கள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் அதிக அளவாக 22 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்பகுதிகள் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 170 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக கூறியுள்ள மத்திய சுகாதார அமைச்சகம், அந்த மாவட்டங்களை ஹாட் ஸ்பாட் பகுதிகள் அதாவது, அபாயம் மிக்க சிவப்புப் பகுதிகளாக அறிவித்துள்ளது.

207 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிகக் குறைவாக இருப்பதாகவும், 353 மாவட்டங்களில் பாதிப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில், தமிழகத்தின் 22 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, சென்னை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதேபோல, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களும் பாதிப்புக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமாக பாதிக்கப்படாத, அதேநேரம், பாதிக்கப்பட வாய்ப்பு உள்ள மாவட்டங்களாக 7 மாவட்டங்களை சுகாதார அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. அதில், தஞ்சாவூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அடுத்ததாக, மகாராஷ்டிராவில் உள்ள 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் எனக் கூறி அவற்றை ஹாட்ஸ்பாட்டாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மும்பை, புனே, தானே, நாக்பூர், நாசிக் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் என தெரிவித்துள்ளது.இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலத்தின் 13 மாவட்டங்களும், ராஜஸ்தானில் 12 மாவட்டங்களும், ஆந்திராவில் 11 மாவட்டங்களும், டெல்லியில் 10 மாவட்டங்களும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 20-ஆம் தேதிக்குப் பிறகு சில அத்தியாவசியப் பணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இருப்பினும், ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த 170 மாவட்டங்களுக்கும் இது பொருந்ததாது என்றும், தற்போதுள்ள கடும் கட்டுப்பாடுகளே நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.