EBM News Tamil
Leading News Portal in Tamil

நியூஸ் 18 செய்தி எதிரொலி – உணவில்லாமல் தவித்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவிய சென்னை மாநகராட்சி

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மெக்கீஸ் கார்டன் பகுதியில் உள்ள லாட்ஜ்கள், ஹோட்டல்கள், டிக்கெட் முன்பதிவு மையங்களில் ரூம் பாய் வேலைக்கும், சமையல் வேலைக்கும், டிக்கெட் முன்பதிவு வேலைகளையும் செய்ய ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்து 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக அவர்களுக்கு வருமானம் இல்லை, அதனால் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு தவித்து வந்தனர்.

அதன் விளைவாக, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று 60 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட சமையலுக்கு தேவையான பொருட்களை வழங்கியுள்ளனர். இதற்காக நியூஸ் 18 க்கு நன்றி தெரிவித்து பேசிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன், ஏற்கனவே உணவுப் பொருட்கள் அடங்கிய 37 தொகுப்புகள் கொடுத்து இருந்தனர், தற்போது மேலும் 60 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளனர்.அ திகாரிகள் அவர்களுடைய தொடர்பு எண்களையும் வழங்கி, உணவு பொருட்கள் தேவையெனில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஊரடங்கு காலம் முடிவுறும் வரை அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை சென்னை மாநகராட்சி வழங்கும் என்றும் அவர்கள் தங்கியுள்ள இடங்களில் அவர்களிடம் வாடகை வசூலிக்க கூடாது என்றும் உரிமையாளர்களிடம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தவிர, சிகிச்சைக்காக வந்து இப்பகுதியில் சிக்கியுள்ள வெளி மாநில மக்கள் 100 க்கும் மேற்பட்டவர்களையும் மீட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.