EBM News Tamil
Leading News Portal in Tamil

கோயம்பேடு சந்தையில் கணிசமாக குறைந்த காய்கறிகள் விலை…!

காய்கறி வரத்து அதிகரிப்பு மற்றும் ஆன்லைன் விற்பனையால் கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கணிசமாக குறைந்துள்ளது.

சென்னையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாடும் காய்கறி சேவை மூலம் வீடுகள் தோறும் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன், வெளியூர்களில் இருந்து காய்கறிகள் அதிகளவு கோயம்பேடு சந்தைக்கு வரத் தொடங்கியதால் காய்கறிகள் விலை குறையத் தொடங்கியுள்ளது.

பொதுவாக 300 முதல் 350 சரக்கு வாகனங்களில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரும். ஆனால் தற்போது வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களான ஓசூர் திருநெல்வேலி மதுரை மார்க்கெட்டுக்கு செல்லும் சரக்கு வண்டிகள் அனைத்தும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வர துவங்கியுள்ளன.

இன்று மட்டும் 450 வாகனங்களில் 5500 டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளன. இதனால் காய்கறிகளின் விலை மிகக் கணிசமாக குறைந்துள்ளது.

குறிப்பாக எப்போதுமே இந்த கோடைகாலத்தில் காய்கறிகளின் விலை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது இந்த கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது.

ஒரு கிலோ வெங்காயம் 2 ரூபாய் வரை குறைந்து 18 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கத்தரிகாய் தற்போது 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோன்று பீன்ஸ் கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் 10 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.மேலும் பொதுமக்கள் அதிகம் ஒரே இடத்தில் கூட வேண்டாம் என்பதற்காக, தமிழக அரசும் சி.எம்.டே.ஏ வும் இணைந்து காய்கறிகளும் பழங்களும் வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. அந்த வகையில் zomata, swiggy, uber போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுடன் இணைந்து தற்போது காம்போ வாக காய்கறிகள் மற்றும் பழங்கள் வீட்டிற்கே நேரடியாக சென்று விற்கப்படுகின்றன.

இந்த ஆன்லைன் டெலிவரியில் திராட்சை அரை கிலோ, ஆரஞ்சு அரை கிலோ, ஆப்பிள் அரை கிலோ, வாழைப்பழம் அரைடஜன் என ஒரு காம்போ பேக் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.