வீட்லயே இருங்கள்.. பம்பர் பரிசுடன் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்.. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்: சமூக விலகலை கடைப்பிடித்தால் மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
கொரோனாவை ஒழிக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. அது போல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் மக்கள் சமூக விலகலைத் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசும், மாநில அரசும் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் சமூக விலகலின் அவசியத்தை உணர்த்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிரது. போலீஸாரும் தங்கள் பங்குக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையை செவ்வனே செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் காய்கறி, மளிகை சாமான்கள் வாங்குவதற்குக் கூட யாரும் வெளியே வரக் கூடாது என்பதற்காக அரசே விவசாயிகள், சமூக ஆர்வலர்களின் உதவியுடன் வீடு வீடாக சென்று விநியோகிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில் திண்டுக்கல்லில் உள்ள 48 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ 2500 மதிப்பிலான 39 வகையான மளிகை பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கப்படவுள்ளோம். இதனை வீட்டிலிருந்து வாங்குவோருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படுகிறது. முதல் பரிசாக ரூ10 ஆயிரம் மதிப்பிலான ஃபிரிட்ஜும், இரண்டாவது பரிசாக பீரோ இருவருக்கும் 3ஆவது பரிசாக குக்கர் 3 பேருக்கும் வழங்கப்படவுள்ளது. ரூ 500 மதிப்பிலான சேலைகள் 108 பேருக்கு சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது. எனவே வீட்டிற்குள் இருந்தாவாறே மக்கள் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.