EBM News Tamil
Leading News Portal in Tamil

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 23 பேர் மோசமான வானிலையால் தவிப்பு

நேபாளத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 23 பேர், அங்கு தற்போது நிலவும் மோசமான வானிலையால் ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு மீட்டு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் வள்ளலார் டிரஸ்ட் மூலம் திருப்பூர், நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கடந்த 23-ம் தேதி, நேபாளத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். இதில் 22 பேர் திருப்பூரைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது. இந்நிலையில் அங்கு தரிசனம் முடித்ததும் மோசமான வானிலை நிலவியது. இதனால் கைலாஷ் அருகே சிமிகோட்டில் உள்ள விடுதியில் அனைவரும் தங்கியிருந்தனர். தற்போது நாளுக்கு நாள் தொடர்ந்து மோசமான வானிலை நிலவுவதால், அவர்கள் தமிழகம் வருவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. புனித யாத்திரை சென்றிருந்த நிர்மலா (37) என்பவரின் கணவர் ரத்தினகுமார் கூறியதாவது: உறவினர் நடராஜன் (70), அவரது மனைவி ராதாமணி (60), திருப்பூர் குமார் நகர் கந்தசாமி தம்பதியர், கருவம்பாளையம் முருகேஷ் மற்றும் பாரதி தம்பதியர் என திருப்பூரில் இருந்து 22 பேர் அங்கு உள்ளனர். கடந்த 5 நாட்களாக மோசமான வானிலை நிலவுவதால், அறையைவிட்டு வெளியே செல்லாமல் தவிக்கின்றனர். பலர் குளிரால் சிரமப்பட்டு அவர்களின் உடல்நிலை மேலும் தொய்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக பத்திரமாக மீட்டு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
எங்களை மீட்க வேண்டும்
ரத்தினகுமாரின் மனைவி நிர்மலா ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது: கைலாஷ் அருகே சிமிகோட்டில் இருந்து நேபாளம் கன்ச்கிரிக்கு விமானம் மூலம் வந்தடைந்து அதன்பின் காட்மாண்டில் இருந்து டெல்லி, சென்னை வழியாக கோவை வந்தடைய முடியும். இந்த அனைத்து பயணங்களும் விமானம் மூலமாகவே இருக்கிறது. தற்போது நிலவும் மோசமான வானிலை அதற்கு தடையாக உள்ளது. உணவு மற்றும் குடிநீர் கிடைத்தாலும் அவை போதிய அளவில் இல்லை. வானிலை மேலும் மோசமாகும் முன்பு எங்களை மீட்க வேண்டும் என்றார்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகத் தரப்பில் கூறியதாவது: கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்றவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பான தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர தயாராக உள்ளது என்றனர்.
கல்வி நிறுவன இயக்குநர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் திருச்செங் கோடு வித்யா விகாஸ் கல்வி நிறுவன மேலாண்மை இயக்குநராக உள்ளார். கடந்த 24-ம் தேதி கைலாஷ் மானசரோவருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதுகுறித்து அவரது மகன் வெற்றிச்செல்வன் கூறும்போது, “எனது தந்தையும், திருப்பூரைச் சேர்ந்தவர்களும் கைலாஷ் மானசரோவருக்கு சென்றனர். நேபாள தலைநகர் காட்மாண்டில் இருந்து விமானம் மூலம் இமயமலை அடிவாரமான சிமிகோட் சென்றனர். பிறகு, அங்கிருந்து குதிரை மூலம் கைலாஷ் மானசரோவருக்கு சென்றுள்ளனர். மீண்டும் சிமிகோட் திரும்பியவர்கள், மோசமான வானிலை காரணமாக அங்கேயே கடந்த 4 நாட்களாக தங்கியுள்ளனர்.
நேற்று தந்தை வீடு திரும்பியிருக்க வேண்டும். தந்தையுடன் வட மாநிலங்களைச் சேர்ந்த 200 பேர் உள்ளனர். அவர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தந்தை குணசேகரனுடன் பேசினேன். அவர் உட்பட அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தார்” என்றார்.