EBM News Tamil
Leading News Portal in Tamil

திமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி சொத்து முடக்கம்

திமுகவை சேர்ந்த கரூர் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் சொத்துகளை முடக்கி வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கரூரைச் சேர்ந்தவர் கே.சி.பழனிசாமி(82). முன்னாள் எம்.பியான இவர், திமுக சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ளார்.
சொத்துகள் அடமானம்
இவருக்கு கரூர் மாவட்டம் மாயனூரில் பாலிதீன் சிமென்ட் பைகள் தயாரிக்கும் நிறுவனமும், புதுச்சேரியில் சில தொழில் நிறுவனங்களும் உள்ளன. இந்நிலையில், கே.சி.பழனிசாமி, வங்கிகளில் தனது சொத்துகளை அடமானம் வைத்து கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு பெற்ற கடனை குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், குறித்த காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தாததால், கோவை ஸ்டேட் வங்கி நிர்வாகம் கே.சி.பழனிசாமியின் சொத்துகளை கையகப்படுத்துவதாக அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கி அறிவிப்பு
அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கரூரைச் சேர்ந்த கே.சி.பழனிசாமி மற்றும் அவரது உறவினர்களின் சொத்துகளை அடமானம் வைத்து, பல்வேறு வங்கிகளில் புதுச்சேரியில் செயல்படும் கரூர் கே.சி.பி. பேக்கேஜிங்ஸ் லிட். பெயரில், ரூ.173 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 571 கடன் பெறப்பட்டுள்ளது.
அவற்றை முறையாக திரும்ப செலுத்த தவறியதால், கடந்த பிப்.28-ம் தேதி நோட்டீஸ் விடப்பட்டு, அதிலிருந்து 60 நாட்களுக்குள் கடனை திருப்பிச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், குறித்த நேரத்தில் மேற்கண்ட தொகையை செலுத்த தவறியதால், கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, ஐடிபிஐ ஆகிய வங்கிகளின் ஒப்புதலுடன், கூட்டமைப்புக்கு தலைமையேற்ற வங்கி என்ற அடிப்படையில், கடன்தாரரின் உத்தரவாதம் அளித்த சொத்துகள் கையகப்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு கோவை ஸ்டேட் வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.