கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் விசாரிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை (ஆக. 5) சென்னை வருகிறார்.
சிறுநீர் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சல், ரத்த அழுத்தம் குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 27-ம் தேதி நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் கண்காணித்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துச் சென்றனர்.
கருணாநிதிக்கு கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரி செய்வதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெவித்துள்ளன.
இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் விசாரிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் அவர், பிற்பகல் 2.40 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு வருகிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் கருணாநிதியை நேரில் பார்க்க இருக்கிறார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடமும், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரிடமும் கேட்டறிகிறார். பின்னர், மாலை 3.40 மணி அளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவகவுடா, நேற்று மாலை 5.40 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங் களவை திமுக குழு தலைவர் கனிமொழி ஆகியோரை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய தேவகவுடா, ‘‘கருணாநிதியை அவர் சிகிச்சை பெறும் வார்டுக்கு நேரில் சென்று தொலைவில் இருந்து பார்த்தேன். அவரது உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் நூறு ஆண்டுகளை கடந்து நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன். மத்தியில் பல அரசுகள் அமைய காரணமாக இருந்தவர் கருணாநிதி. 1996-ல் நான் பிரதமராக காரணமாக இருந்தவர். அதை மறக்க மாட்டேன். வருங்காலங்களிலும் நாட்டுக்கு அவர் வழிகாட்டுவார்’’ என்றார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க இன்று காவேரி மருத்துவமனைக்கு வர உள்ளனர்.
இதற்கிடையே, கருணாநிதிக்கு 7-வது நாளாக நேற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இயக்கத்தின் துணைத் தலைவர் கோ.ப.அன்பழகன், நடிகர்கள் விஷால், ராகவா லாரன்ஸ், வினீத் உள்ளிட்டோர் நேற்று மருத்துவ மனைக்கு வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்தனர்.
ஆவடி அருகே உள்ள அண்ணனூரைச் சேர்ந்த 84 வயதான சங்கரன் என்பவர், கருணாநிதிக்காக ஒரு ஊன்றுகோலை தயாரித்து கொண்டு வந்திருந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்த காவல் துறையினர், ஸ்டாலினிடம் கூறி ஊன்றுகோலை கொடுக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி அனுப்பி வைத்தனர். கருணாநிதி நலம்பெற வேண்டி கடிதம் எழுதிய சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த மிச்சல் மிராக்ளின் என்ற 8 வயது சிறுமி, நேற்று முன்தினம் ஸ்டாலினை சந்தித்தார்.