EBM News Tamil
Leading News Portal in Tamil

விடைத்தாள் மறு மதிப்பீடு விவகாரத்தில் பெரிய நெட்வொர்க்; வெளிப்படையான விசாரணை: துணைவேந்தர் சூரப்பா உறுதி

மறு மதிப்பீடு விவகாரத்தில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான, வெளிப்படையான விசாரணை உறுதிப்படுத்தப்படும் என, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017 ஏப்ரல், மே மாதங்களில் பருவத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் குறைந்த மதிப்பெண் மற்றும் தோல்வி அடைந்த 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் 73 ஆயிரத்து 733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதோடு, 16 ஆயிரத்து 636 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றனர்.
வழக்கத்திற்கு மாறாக பெரும்பாலான மாணவர்கள் மறு மதிப்பீட்டில் தேர்ச்சியடைந்ததால், பேராசிரியர்கள் சிலர் மாணவர்களை தேர்வில் வெற்றி பெறச் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்று கூடுதல் மதிப்பெண் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அறிந்த மீனா என்ற மாணவி உரிய ஆதாரங்களுடன் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் புஷ்பலதா விசாரணையைத் தொடங்கினார்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா மற்றும் பேராசிரியர்கள் விஜயகுமார், சிவக்குமார், சுந்தரராஜன், மகேஷ் பாபு, அன்புச்செல்வன், பிரதீபா, பிரகதீஸ்வரர், ரமேஷ் கண்ணன், ரமேஷ் ஆகிய 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களுள், உமா மீதான குற்றச்சாட்டு விசாரணையில் நிரூபணமானதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, “மறு மதீப்பீடு விவகாரம் தொடர்பாக அனைவரது ஒத்துழைப்புடன் விசாரணை நடைபெறுகிறது. குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான, வெளிப்படையான விசாரணை உறுதிப்படுத்தப்படும். மறு மதிப்பீடு முறைகேடு புகாரில் எத்தனை பேராசிரியர்களுக்கு தொடர்பு இருக்கிறது எனத் தெரியாது. ஆனால், இந்த விவகாரத்தில் பெரிய நெட்வொர்க் இருப்பதாக கருதுகிறேன்.
தேர்வு, விடைத்தாள் திருத்துதல் ஆகியவற்றில் விருப்பு, வெறுப்பற்ற நிலை தேவை என வலியுறுத்துகிறேன். நேர்மை, நியாயம் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். தவறுகள் மீது நடவடிக்கை உண்டு. முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சட்டரீதியான, வெளிப்படையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழலற்ற நிர்வாகம் உறுதிப்படுத்தப்படும். சட்டம் தனது கடமையைச் செய்யும். எல்லாவற்றிலும் துணைவேந்தர் கவனம் செலுத்த இயலாது. ஒவ்வொரு கோப்புகளை கவனமாக பரிசீலித்து, தேவைப்பட்டால் அழைத்து விசாரிக்கின்றோம்” என சூரப்பா தெரிவித்தார்.