நர்சிங் மாணவி பலாத்காரம் செய்து கொலை: கள்ளக்குறிச்சி அருகே சிறுவன் உட்பட 4 பேர் கைது
கள்ளக்குறிச்சி அருகே நர்சிங் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுவன் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய் துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயப் பாளையத்தைச் சேர்ந்தவர் அழகப் பிள்ளை. இவரது மகள் அமராவதி (21). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அமராவதி நேற்று முன்தினம் அப்பகுதி யில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
உடலை கைப்பற்றிய கச்சிராயப் பாளையம் போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸ் விசாரணை யில் இப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் உள்ள நர்சிங் கல்லூரியில் பயின்று வந்த அமராவதிக்கு, கச்சிராயப்பாளையத்தை அடுத்த காமராஜ் காலனியைச் சேர்ந்த குணசேகரன் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், ஜூலை 28-ம் தேதி அமராவதியை குணசேகரன் வெளியே செல்லலாம் என்று கூறி அழைத்துள்ளார். இதையடுத்து அப்பெண் வீட்டிலிருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு அவருடன் சென்றுள்ளார்.
பின்னர் இருவரும் அருகிலுள்ள செட்டியார்காடு பகுதிக்குச் சென்றுள்ளனர். குணசேகரன் மது அருந்திய நிலையில் அப் பெண்ணை பாலியல் உறவு கொண்டதாக தெரிகிறது.பின்னர் இளம்பெண் கொண்டு வந்த பணத்திலிருந்து ரூ.4 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, மதுபாட்டில்கள் மற்றும் தனது பைக்குக்குத் தேவையான பொருட்கள் வாங்கி வந்துள்ளார்.
அப்போது தனது நண்பர்களான கோமுகிதாசன் (22), ரத்தினம் (24) மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகியோரை அழைத்துள்ளார். அவர்களும் காட்டுப் பகுதிக்குச் சென்று, அமரா வதியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். இதற்கு அவர் மறுக்கவே, அவரது கழுத்தை துப்பட்டாவால் இறுக்கியுள்ளனர். இதில் மயக்கமுற்ற இளம் பெண்ணை, குணசேகரனின் நண்பர்கள் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. பின்னர் இளம்பெண் ணின் தலையில் கல்லால் தாக்கிகொலை செய்து, அதே பகுதி யில் உள்ள கிணற்றில் வீசிச் சென்றுள்ளனர்.
இதனிடையே இளம்பெண் ணின் உறவினர்கள், அவரைத் தேடி புகார் அளித்திருந்த நிலையில், நேற்று முன் தினம் கச்சிராயப்பாளையம் செட்டியார் காடு பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து இளம்பெண்ணின் சடலத்தை மீட்டோம்.
இதைத்தொடர்ந்து இளம் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த குணசேகரன், ரத்தினம், கோமுகிதாசன் மற்றும் சிறுவன் உட்பட 4 பேர்மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்துள்ளோம். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.