சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியதில் உள்நோக்கம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியதில் தமிழக அரசுக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லை என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்காக ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான பிரிவு நியமிக்கப்பட்டது. ஆனால், ஐஜி பொன் மாணிக்கவேல் நடத்தி வரும் விசாரணையில் அரசுக்கு நம்பிக்கை இல்லை என்றும், தமிழகத்தில் நடந்த சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரித்து வரும் அனைத்து வழக்குகள் மற்றும் புதிதாக எதிர்காலத்தில் வரக்கூடிய அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்து அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், சிலை கடத்தல் வழக்கை பொன் மாணிக்கவேல் திறம்படக் கையாண்டு வருகிறார். அந்த வழக்கிலிருந்து சிலரைக் காப்பாற்றவே சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க தமிழக அரசு முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனால் இந்த விவகாரம் பேசுபொருளானது. இந்த சூழலில் இதுகுறித்து மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது, “சிலை கடத்தல் பிரச்சினை சர்வதேச அளவிலான பிரச்சினை. தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான வல்லமை பெற்றது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
சர்வதேச பிரச்சினை என்பதால் சிபிஐ அமைப்பை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சிபிஐக்கு மாற்றினாலும் அல்லது மாற்றாவிட்டாலும் கேள்வி எழுப்புகின்றனர். இந்த விவகாரத்தில் குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிற்க வேண்டும் என்பதுதான் அரசின் ஒரே நோக்கம்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.