4 நாட்களாக பரபரப்பாக காணப்பட்ட காவேரி மருத்துவமனை வளாகம் இயல்பு நிலைக்கு திரும்பியது
திமுக தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 27-ம் தேதி நள்ளிரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு மதிக்கப்பட்டார். இதையடுத்து ஏராளமான திமுகவினர் மருத் துவமனை முன்பு குவிந்தனர். இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்த அவர்கள், ‘எழுந்து வா தலைவா’ என தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். பல்வேறு கட்சித் தலைவர்களும், முக்கியப் பிர முகர்களும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துச் சென்றனர்.
இதனால், கடந்த 4 நாட்களாக அந்தப் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக் கப்பட்டனர். கொட்டும் மழையிலும் தொண்டர்கள் நனைந்தபடி காத்திருந்தனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் மருத்துவ மனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். கருணாநிதியை அவர் பார்த்த படம் வெளியானது. அதில் கருணாநிதி, செயற்கை சுவாசக் கருவிகள் எதுவுமின்றி, சாதாரண நிலையில் சிகிச்சை பெறுவது தெரிந்தது. இதையறிந்த திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதையடுத்து, தொண்டர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கினர்.
இந்நிலையில், நேற்று காலை கூட்டம் குறையத் தொடங்கியதால் மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. போலீ ஸார் எண்ணிக்கையும் கணிசமாக குறைக்கப்பட்டது.
கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அந்த வளாகத்தில் இருந்த கடைகள், கடந்த 4 நாட்களாக மூடப்பட்டிருந்தன. அந்தக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இது தொடர்பாக வணிக வளாகத்தின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘2 மாடிகள் கொண்ட பர்னீச்சர், வீட்டு அலங்கார கடையில் மட்டுமே 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த சில நாட்களாக கடைகள் திடீரென மூடப்பட்டன.
அதனால், எங்களுக்கு பணி இல்லை. ஆனால், இந்த நாட்களில் வாடிக்கையாளர்களிடம் நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக தனி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. 5 நாட்களுக்கு பிறகு கடை திறக்கப்பட்டுள்ளது. கடைகள் மூடப்பட்ட நாட்களுக்கு ஊதியம் பிடித்தம் எதுவும் செய்ய வில்லை’’ என்றார்.