EBM News Tamil
Leading News Portal in Tamil

நிர்வாகிகளுடன் ஆலோசித்து கூட்டணி பற்றி முடிவு: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தகவல்

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். மக்களவை தேர்தலுக்கான புதிய கூட்டணிக்கான முன்னோட்டமாக இந்த சந்திப்புகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பிய கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி மேலாண்மை ஆணையம் அமைய வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம். எனவே, அதை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக அனைத்துவித அழுத்தங்களையும் நாம் கொடுக்க வேண்டும். விவசாயிகள் அதைத்தான் எதிர்பார்த்து உள்ளனர்.
கமல்ஹாசன் காங்கிரஸை நோக்கி பயணிக்கிறார் என்று நீங்கள் இப்போது கூறுகிறீர்கள். கடந்த வாரம் வரை வேறுவிதமாக கூறி வந்தீர்கள். இப்போது நீங்களே மாற்றி கூறுகிறீர்கள். என் பாதை என்ன என்பதை நான் முடிவு செய்கிறேன். 2019 மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. அதை கட்சியினரோடு ஆலோசனை நடத்திய பிறகே முடிவு செய்வோம்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
தேர்தல் ஆணையத்தில் பதிவு
கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய கமல்ஹாசன், தனது கட்சியை முறைப்படி பதிவு செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். இதுதொடர்பாக, டெல்லி சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கும் கமல்ஹாசன் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், கமலின் மனுவை ஏற்று மக்கள் நீதி மய்யம் கட்சியை நேற்று தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது.