ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தினகரன் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தினகரன் வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ரவி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில், “தினகரன் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை கொடுத்து வெற்றி பெற்றதால், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி தினகரனும் தனியாக மனு தாக்கல் செய்திருந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது. ஆதாரமும் இல்லை. ஓட்டுப்போடுவதற்காக பணம் வாங்கியது யார்? அதைக் கொடுத்தது யார்? போன்ற விவரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.