EBM News Tamil
Leading News Portal in Tamil

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட் டுள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர் லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் 3 மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தினர். 100-வது நாளாக கடந்த மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட் டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஸ்னோலின், தமிழரசன், சண்முகம், கந்தையா, கார்த்திக், காளியப்பன், செல்வசேகர், கிளாஸ்டன், மணிராஜ், அந்தோணி செல்வராஜ், ரஞ்சித்குமார், ஜான்சி, ஜெயராமன் ஆகிய 13 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவத்தில் ‘மப்டியில்’ இருந்த போலீஸார் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்தது.
அரசாணை வெளியீடு
போலீஸாரின் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆலையை மூட அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. கலவரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமை யில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தர விட்டது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் எஸ்.ஜிம்ராஜ் மில்டன், டி.பார்வேந்தன், பாவேந்தன் ஆகியோர் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:
இந்த துயர சம்பவத்துக்கு போலீஸார்தான் முழுக் காரணம். அமைதியான வழியில் போராட் டம் நடத்திய பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். முழங்காலுக்கு கீழே சுடாமல், குறிபார்த்து மார்பு, இடுப்பு மற்றும் தலைப்பகுதிகளில் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.
எனவே, இந்த கொடூர சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்பி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்பது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரியிருந்தனர்.
போலீஸார் மீது கொலை வழக்கு
இதேபோல துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை இழப்பீடு வழங்க வேண்டும். பணியில் உள்ள உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளுடன் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளனர்.
இந்த வழக்குகளை கடந்த மே இறுதியில் விசாரித்த விடுமுறை கால நீதிபதிகள் எஸ்.பாஸ்கரன், ஆர்எம்டி டீக்காராமன் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வு, சிபிஐ விசாரணை கோருவது, இழப்பீடு அதிகரிப்பது தொடர்பாக தமிழக அரசு மற்று் சிபிஐ தரப்பில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு இருந்தனர்.
சிறப்பு புலனாய்வுக் குழு
இதனிடையே, வழக்கறிஞர் ரஜினிகாந்த் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தூத்துக்குடி போராட் டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார், பலியானோர் எத்தனை பேர், பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் என்ற விவரத்தை வெளியிட உத்தரவிட வேண்டும். ஏனெனில், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு பலரைக் காணவில்லை என பொதுமக்கள் அஞ்சியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர் கள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தர விட வேண்டும்’ என அந்த மனு வில் கோரி இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோரைக் கொண்ட அமர் வில் நேற்று நடந்தது.
அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, இதே கோரிக்கை தொடர் பாக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது’’ என்றார்.
பதிலளிக்க உத்தரவு
அப்போது தலைமை நீதிபதி குறுக்கிட்டு ‘‘இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என மனுதாரர் கூறுகிறார். ஆனால், இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் சரியாக இருக் கும்’’ என்று கூறினார்.
பின்னர், இதுதொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 6-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
ஏற்கெனவே ஒரு வழக்கு விசாரணையின்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் பலியாகி இருப்பது துரதிர்ஷ்டவசமானது என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.