EBM News Tamil
Leading News Portal in Tamil

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் அகற்றுவது தொடக்கம்: அத்தியாவசிய பராமரிப்புக்கு உதவி கோருகிறது ஆலை நிர்வாகம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை அகற்றுவதற்கான பணிகள் நேற்று தொடங்கின. ஆலையில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள, குறைந்தபட்ச மின்சக்தி மற்றும் ஊழியர்கள் வேண்டும் என அரசிடம், ஆலை நிர்வாகம் கோரியுள்ளது.
மக்கள் போராட்டம் காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த மாதம் 28-ம் தேதி மூடி சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் போன்றவை துண்டிக்கப்பட்டுவிட்டன.
இந்த சூழ்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக, ஆலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மூலம் கடந்த சனிக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இதனை ஆய்வு செய்ய தூத்துக்குடி சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நிபுணர்கள் குழுவை, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அமைத்தார்.
அமிலக் கசிவு
இந்த குழுவினர் நேற்று முன்தினம் மாலை ஆலைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கந்தக அமிலம் சேமிப்பு பகுதியில் லேசான கசிவு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆலையில் உள்ள கந்தக அமிலம் முழுவதையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையிலான குழுவினர் நேற்று காலை மீண்டும் ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று கந்தக அமிலத்தை அகற்றும் பணியை தொடங்கினர். கந்தக அமிலத்தை சேமிப்பு கிடங்கில் இருந்து பாதுகாப்பாக அகற்றி டேங்கர் லாரிகள் மூலம் வெளியே கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதற்காக, டேங்கர் லாரிகள் ஆலைக்குள் கொண்டு செல்லப்பட்டன.
இன்று நிறைவு
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமிலம் முழுவதையும் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணி இன்று மாலைக்குள் முடியும்.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியே எடுக்கப்படும் கந்தக அமிலத்தை மற்ற ஆலைகளுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கந்தக அமிலத்தை பாதுகாப்பாக வெளியேற்றுவது மட்டுமே மாவட்ட நிர்வாகத்தின் பணி. அதனை விற்பனை செய்வது ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வேலை. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.
ஸ்டெர்லைட் கோரிக்கை
ஸ்டெர்லைட் ஆலையில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள குறைந்தளவு மனித சக்தி மற்றும் மின்சக்தி வழங்குமாறு வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர உருக்கு பிரிவு அருகேயுள்ள கந்தக அமிலம் சேமிப்பு டேங்கில் கசிவு இருப்பது போலீஸ் ரோந்து பணியின்போது கண்டறியப்பட்டது.
ஏதேனும் விபத்து ஏற்படாமல் தடுக்க, கந்தக அமிலம் கசிவை சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்க எங்களை அனுமதிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடைபெறாததால் இதுபோன்ற விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளதை அறிந்து, ஆலையில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள குறைந்த மனிதசக்தி மற்றும் மின்சக்தியை வழங்குமாறு தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால், இந்த கோரிக்கை இப்போது வரை நிலுவையில் உள்ளது. விபத்துகளை தவிர்க்க ஆலையை குறைந்த அளவு பராமரிக்க எங்களை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.