மேட்டூர் அணை நிரம்பியவுடன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்: முதல்வர் பழனிசாமி உறுதி
மேட்டூர் அணை நிரம்பியவுடன் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி வந்த அவர், விமான நிலையத்தில் கூறியது:
காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளேன். பிரதமர் மோடியிடமும் வலியுறுத்தினேன்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டினால் மட்டுமே, பாசனத்துக்காக தண்ணீர் திறக்க முடியும். தற்போது தண்ணீர் வந்துகொண்டுள்ளது. விரைவில் அணை நிரம்பும் என எதிர்பார்க்கிறோம். நிரம்பியவுடன், உடனடியாக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும். இம்மாத இறுதிக்குள் மேட்டூர் அணை நிரம்புமா என்பதற்கான பதில் இறைவனிடம் உள்ளது என்றார்.
இணைந்தால் பாராட்டலாம்
அவரிடம், செய்தியாளர்கள், “தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் தங்கதமிழ்ச்செல்வன் உட்பட 8 பேர் மீண்டும் அதிமுகவில் இணையப்போவதாக வரும் தகவல்கள் உண்மையா?” என கேள்வி எழுப்பியபோது, “இதுபற்றி தெரியவில்லை. நீங்கள்தான் சொல்கிறீர்கள். வந்து இணைந்தால் பாராட்டுக்குரியது” என்றார்.
தொடர்ந்து, “தங்கதமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி தரப்போவதாகவும் கூறப்படுகிறதே?” என்று கேட்டபோது, “தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு எப்படி அமைச்சர் பதவி தர முடியும்?” எனக் கேட்டார்.
அதேபோல, “இடைத்தேர்தல் வர வேண்டும் என்பதற்காக தினகரன் திட்டமிட்டு, தங்கதமிழ்ச்செல்வனை ராஜினாமா செய்யச் சொல்கிறார் எனக் கூறப்படுகிறதே?” எனக் கேட்டதற்கு, “அப்படி எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது எப்படி இடைத்தேர்தல் வரும்?” என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.