ரூ. 1.5 கோடி தருவதாக கூறி பெண்ணிடம் நூதனமாக ரூ. 5 லட்சம் பறிப்பு
சென்னையைச் சேர்ந்தவர் ரஞ்சிதா. இவருக்கு இ-மெயிலில் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், கோடீஸ்வரர் ஒருவருக்கு அவசரமாக கிட்னி தேவைப்படுகிறது. அதனை தானமாக தர முன் வருபவர்களுக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய ரஞ்சிதா, குடும்பத்தினருக்கு தெரியாமல் தனது கிட்னியை தானமாக கொடுக்க முடிவு செய்துள்ளார். இதற்கிடையில் இ மெயில் அனுப்பியவர்கள், ரஞ்சிதா கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்கியதுபோல் போலியான ஆவணங்களை தயார் செய்து அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து வங்கி கணக்கில் பணத்தை அனுப்ப நிறைய நடைமுறைகள் இருப்பதாக கூறி கொஞ்சம் கொஞ்சமாக ரஞ்சிதாவிடமிருந்து ரூ.5 லட்சத்து 35 ஆயிரம் பறித்துள்ளனர். பணத்தை அவர்கள் கூறிய வங்கி கணக்குக்கு ரஞ்சிதா அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அவர்களிடம் இருந்து தகவல் ஏதும் வரவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரஞ்சிதா கிட்னி தானம் கொடுக்க விருப்பமில்லை என்றும், தான் செலுத்திய பணத்தை திருப்பி அனுப்பி வைக்குமாறும் கூறி கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்க 10 சதவீத கமிஷனாக ரூ. 50 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து ரஞ்சிதா புகார் தெரிவித்துள்ளார். அதன்படி, போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.