EBM News Tamil
Leading News Portal in Tamil

1,106 கொள்ளை, 815 செயின் பறிப்பு சம்பவம்

சென்னையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 1,106 கொள்ளை, 815 செயின் பறிப்பு, 750 செல்போன் பறிப்புகள் நிகழ்ந்துள்ளன. இதையடுத்து, தற்போது ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சென்னையில் தனியாக நடந்து செல்லும் வயதான பெண்கள், பைக்கில் கணவருடன் செல்பவர்கள், சாலையோரமாக பேசிக்கொண்டே நடந்து செல்வோர் என பெண்களிடம் தொடர்ந்து நகை, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. கத்திமுனையில் கடத்தி பணம் பறிக்கும் சம்பவங்களும் நடக்கத் தொடங்கின. இதனால், பொதுமக்கள் குறிப்பாக, பெண்கள் தனியாக நடந்து செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டது.
சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் 2 கூடுதல் ஆணையர்கள் (தெற்கு, வடக்கு), 4 இணை ஆணையர்கள், 12 துணை ஆணையர்கள், 48 உதவி ஆணையர்கள் மேற்பார்வையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாலும் குற்றங்கள் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.
குறிப்பாக 2017-ல் மட்டும் 712 கொள்ளை, 615 செயின் பறிப்பு, 520 செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. 2018-ல் இதுவரை 394 கொள்ளை, 200 செயின் பறிப்பு, 230 செல்போன் பறிப்புகள் நடந்துள்ளன. இவை அனைத்தும் புகார் பதிவானதன் அடிப்படையிலான எண்ணிக்கை. புகார் கூறப்படாமல் நடந்த சம்பவங்களும் உண்டு.
இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லதா என்பவர் கூறும்போது, ‘‘போலீஸார் சரிவர ரோந்து செல்வதில்லை. குற்றவாளிகள் சிக்கினாலும், மென்மையான போக்கையே கையாள்கின்றனர். குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்க இதுவே காரணம்’’ என்றார்.
பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முன்பெல்லாம் வழக்கு பதிவு செய்வது, குற்றவாளிகள் கைது செய்யப்படுவது உட்பட எல்லாம் முறைப்படி நடக்கும். தற்போது நிலைமை வேறு. திருட்டு, செயின் பறிப்பு, கொள்ளை நடந்தால், உண்மையான மதிப்பைக் காட்டாமல், குறைத்துக் காட்டி சில ஆய்வாளர்கள் வழக்கு பதிவு செய்கின்றனர்.
மேலும், வழக்கை முடிக்க வேண்டும் என்பதற்காக, சம்பந்தம் இல்லாதவர்களைக் கைது செய்து கணக்கு காட்டுவதும் நடக்கிறது. இதனால், உண்மையான குற்றவாளிகள் தப்பிவிடுகின்றனர். பின்னாளில் உண்மை குற்றவாளிகள் பிடிபட்டாலும், பழைய குற்ற வழக்குகளில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. இந்த நிலைமை ஒட்டுமொத்தமாக மாற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், குற்ற சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 11-ம் தேதி இரவு முதல் ‘ஸ்டார்மிங் ஆபரேஷன்’ என்னும் சிறப்பு ரோந்து பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி இரவு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனே நேரில் களத்தில் இறங்கினார். 3,500-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ரோந்து பணி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கூடுதல் ஆணையர் எம்.சி.சாரங்கன் கூறியபோது, ‘‘செயின், செல்போன் பறிப்பவர்கள், வழிப்பறி செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன்களை திருடி, அவற்றின் ஐஎம்இஐ எண்ணை மாற்றி விற்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்’’ என்றார். சென்னையில் அனைத்து வகையான குற்றங்களும் முழுமையாக குறைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.