சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; தந்தையின் தூக்கு தண்டனை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
ராமேஸ்வரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக அச்சிறுமியின் தந்தைக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் கரையூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரி என்ற மாரிமுத்து (51). இவரது மனைவி தனுஷ்பானு. கடந்த 2013-ம் ஆண்டு கணவன்- மனைவி இடையே தகராறு எழுந்தது. இதையடுத்து தனுஷ்பானு, தனது 9 வயது மகளையும், மகனையும் கரையூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார்.
கடந்த 23.4.2013-ல் மாரிமுத்துவின் 9 வயது மகள் ராமேஸ்வரம் கடற்கரையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுதொடர்பாக ராமேஸ்வரம் கோயில் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.
பிரேதப் பரிசோதனையில் அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றினர்.
இந்நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மகளை பாலியல் வன்கொடுமை செய்து பின் கொலை செய்து உடலைக் கடலில் வீசியதாக மாரிமுத்துவை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி மாரிமுத்துவுக்கு 3.11.2017-ல் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அனுப்பப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
இவ்வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டார். இவர் வாதிடுகையில், ”கொலை செய்யப்பட்ட சிறுமியைக் கடைசியாக மனுதாரருடன் பேசிக்கொண்டிருந்ததை வைத்து மனுதாரரே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கதை புனையப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்று 3 ஆண்டுகளுக்குப் பிறகே மனுதாரரை கைது செய்து போலீஸார் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.
சாட்சிகள் மனுதாரர் கடற்கரையில் தனது மகளை மடியில் போட்டு அழுதுகொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். இதை வைத்து அவர் தான் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறுவது நம்பும்படியாக இல்லை” என்றார்.
இதை ஏற்று மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.