EBM News Tamil
Leading News Portal in Tamil

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; உத்தரவிட்டது யார்? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? சுடுவதற்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் வழங்கபட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான அரசாணையை நீதிபதிகள் ஏற்கவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி கந்தகுமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் “துப்பாக்கிச் சூடு நடத்தபட வேண்டும் என்றால் அதற்கு முன்னதாக சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விதிகள் உள்ளன.
அதன்படி முதலாவதாக அதிகப்படியான கூட்டத்தினை கலைப்பதற்கு கண்ணீர் புகை குண்டை பயன்படுத்தி கூட்டத்தினை கலைக்க வேண்டும். அதன்பின் வாட்டர்ஜக் எனப்படும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் உத்தியை பயன்படுத்தி கூட்டத்தினை கலைக்க வேண்டும். அதன்பின் தடியடி நடத்தி கூட்டத்தினை கலைக்க வேண்டும்.
குறிப்பிட்ட வரைமுறைகளின் படி துப்பாக்கி சூடு நடத்த வேண்டும். பின்பு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அதன்பிறகே போராட்டக்காரர்களின் முழங்காலுக்கு கீழ் சுட வேண்டும். ஆனால் இந்த விதிமுறைகள் எதுவுமே பின்பற்றாமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் 9 பேர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்கி உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? சுடுவதற்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாகல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.