EBM News Tamil
Leading News Portal in Tamil

பனாமாவுக்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்களின் விவரத்தை சரிபார்த்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் | We are verifying details of Indian nationals in Panama ministry of external affairs


புதுடெல்லி: தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப பனாமா, கோஸ்டா ரிகா போன்ற நாடுகளை பாலமாக அமெரிக்கா பயன்படுத்த தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில். அமெரிக்காவில் இருந்து சம்பந்தப்பட்ட நாடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் குறித்த விவரத்தை சரிபார்த்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக வாராந்திர பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெயஸ்வால் கூறியது: “அமெரிக்காவில் இருந்து பனாமா, கோஸ்டா ரிகா போன்ற தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் இந்தியர்கள் உள்ளனரா என்பது குறித்த விவரத்தை சரிபார்த்து வருகிறோம். அது உறுதியானதும் அவர்களுக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பனாமா, கோஸ்டா ரிகா போன்ற நாடுகளை டிரான்ஸிட்டாக அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. அது அவர்களுக்குள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம். அதற்கான செலவுகளை அமெரிக்கா ஏற்றுள்ளது. நாடு கடத்தப்படும் இந்தியர்கள் கண்ணியமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக உள்ளூர் அதிகாரிகள் உடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என அவர் கூறியுள்ளார்.

அதிபர் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றது முதல் அமெரிக்காவில் இருந்து இதுவரை அங்கிருந்து 332 இந்தியர்கள் தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானத்தில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அழைத்து வரப்பட்டனர். பிப்ரவரி 5-ம் தேதி 104 பேர், 15-ம் தேதி 116 பேர், 16-ம் தேதி 112 பேர் என மூன்று விமானங்களில் அவர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்களது கைகளில் கைவிலங்கு மற்றும் கால்களில் சங்கிலி பூட்டப்பட்டது மிகப் பெரிய சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.