EBM News Tamil
Leading News Portal in Tamil

கட்சிகள் தேர்தல் தோல்விக்கு ஆணையத்தின் மீது பழிபோடுவதை கைவிட வேண்டும்: பிரியாவிடை நிகழ்ச்சியில் ராஜீவ் குமார் | Parties should stop blaming the Commission for election defeat: Rajiv Kumar


அரசியல் கட்சிகள் தேர்தலில் ஏற்படும் தோல்விக்கு தேர்தல் ஆணையத்தின் மீது பழிசுமத்துவதை கைவிட வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் (சிஇசி) ராஜீவ் குமார் நேற்று தெரிவித்தார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த ராஜீவ் குமார் நேற்றுடன் ஓய்வுபெற்றார். இந்த நிலையில், அவருக்கு நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியின்போது ராஜீவ் குமார் பேசியதாவது: அனைத்து வேட்பாளர்களும் கட்சிகளும் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடைமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் பங்கேற்கின்றனர் அப்படி ஒவ்வொரு படி நிலையின் போது தவறு ஏற்பட்டால் அப்போதே ஆட்சேபனைகளை எழுப்பாமல் அல்லது அது குறித்து மேல்முறையீடு செய்யாமல் அதன் பின்னர் சந்தேகத்தை உருவாக்க முயற்சிப்பது என்பது விரும்பத்தகாத செயல். தேர்தல் முடிவுகளை தமக்கு சாதகமாக இல்லை என்பதற்காக அதனை ஏற்க விரும்பாத கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் மீது நியாயமற்ற முறையில் குற்றம்சாட்டுகின்றனர். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வசதியாக பலிகடா ஆக்கப்படுகிறது. இந்த குழப்பமான போக்கு விரைவில் கைவிடப்பட வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தும் வழக்குகளில் தேர்தல் காலத்தை உரிய முறையில் பரிசீலித்து நீதித் துறை நடவடிக்கைகள் திட்டமிடப்பட வேண்டும். இதனால், வாக்குப்பதிவு சுமுகமாகவும், தடையின்றி நடைபெறுவதையும் உறுதி செய்ய முடியும். ஆள்மாறாட்டம் மற்றும் பலமுறை வாக்களிப்பதை தடுக்க வாக்காளர்களுக்கு பயோமெட்ரிக் அங்கீகாரத்தை அறிமுகம் செய்யலாம். இவ்வாறு ராஜீவ் குமார் பேசினார்.