EBM News Tamil
Leading News Portal in Tamil

ஃபேஸ்புக்கில் அறிமுகமான பாகிஸ்தான் பெண்ணுக்கு கடற்படை தள படங்களை பகிர்ந்த 2 பேர் கைது | NIA arrests two for leaking sensitive info on Naval Base in Karwar to Pak operative


ஃபேஸ்புக்கில் அறிமுகமான பாகிஸ்தான் பெண்ணுக்கு கடற்படை தளம் பற்றிய படங்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்த இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனர்.

இதுகுறித்து என்ஐஏ மூத்த அதிகாரிகள் கூறியதாவது: இந்திய கடற்படை குறித்த தகவல்களை பாகிஸ்தான் புலனாய்வு குழு திரட்டி வருவதாக எங்களுக்கு கடந்த ஆண்டு தகவல் கிடைத்தது. இது தொடர்பான விசாரணையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தீபக் என்பவர் சிக்கினார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் கார்வார் அருகேயுள்ள கடம்பா கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் ஆகாஷ் நாயக், வேதன் தண்டேல் ஆகிய இருவர் பற்றிய தகவல் பற்றிய தகவல் கிடைத்தது.

இந்த இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். மேலும் நட்புடன் பழகி, கடம்பா கடற்படை தளம் குறித்த தகவல்களை கேட்டுள்ளார்.

இருவருக்கும் அந்தப் பெண் சில பரிசுகளை கொடுத்துள்ளார். மேலும் மாதம் ரூ.5 ஆயிரம் நன்கொடையாக தந்துள்ளார். இதன்படி ஆகாஷும், வேதனும் கடம்பா மற்றும் அங்கோலா கடற்படை தளங்களின் படங்களை அவருக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிந்தவுடன் இருவரையும் ஹைதராபாத் வரவழைத்து என்ஐஏ விசாரணை நடத்தியது.

இருவரின் செல்போன், லேப்டாப், மின்னஞ்சல், ஃபேஸ்புக் ஆகியவற்றை ஆராய்ந்ததில் புகைப்படங்களும் சில தகவல்களும் பகிர்ந்தது உறுதியானது. இதையடுத்து ஆகாஷ், வேதன் ஆகிய இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று கார்வாரில் கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்ற‌னர். அதில், இருவரும் பாகிஸ்தானிய பெண்ணுக்கு கடம்பா, அங்கோலா கடற்படை தளங்களின் செயல்பாடுகள் மற்றும் அங்குள்ள போர்க் கப்பல்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்த‌தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.