கூடுதல் டிக்கெட் விற்பனை செய்தது ஏன்? – டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் தொடர்பாக ரயில்வேக்கு நீதிமன்றம் கேள்வி | Court questions Railways
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில், கூடுதல் டிக்கெட் விற்பனை செய்தது ஏன்? என டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி ரயில் நிலையத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். பிரயாக்ராஜ் வழியாக செல்லும் இரு ரயில்களில் , மகா கும்பமேளாவுக்கு செல்லும் பக்தர்கள் ஏற முயன்றபோது இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது 2 மணி நேரத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பயண சீட்டுகள் டெல்லி ரயில் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது போன்ற சோக சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், ரயில்வே சட்டத்தை மீறும் பயணிகளுக்கு விதிமுறைகள் படி ரூ.1,000 அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனை விதிப்பதை கட்டாயம் ஆக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒருவர் பொது நல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி உபாத்யாய் மற்றும் நீதிபதி துஷர் ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரயிலில் பயணம் செய்யக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையைவிட கூடுதலாக பயணச்சீட்டுகளை ரயில்வேத்துறை தொடர்ந்து விற்பனை செய்தது ஏன்? என மத்திய அரசும், ரயில்வேதுறையும் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
இதற்கு ரயில்வே சார்பில் பதில் அளித்த சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா, ‘‘அனைத்து அம்சங்களையும், ரயில்வேதுறை பரிசீலிக்கும் என்றும், நீதிமன்ற உத்தரவை ஏற்பதாகவும் கூறினார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.