EBM News Tamil
Leading News Portal in Tamil

திரிவேணி சங்கம நீர் புனித நீராடுவதற்கு தகுதியானது: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி | Yogi Adityanath Rejects Faecal Bacteria Report


திரிவேணி சங்கம நீர் புனித நீராடுவதற்கு தகுதியானது என்றும் மகா கும்பமேளாவை சிறுமைப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர் என்றும் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டி உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 56.26 கோடி பேர் புனித நீராடி உள்ளனர். வரும் 26-ம் தேதியுடன் கும்பமேளா நிறைவு பெற உள்ளது.

இந்நிலையில், “கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தின் பல இடங்களில் ஓடும் நீரில், மல கோலிபார்ம் என்ற பாக்டீரியா காணப்படுகிறது. இந்த நீர் குளிப்பதற்கான முதன்மை தரத்துடன் ஒத்துப்போகவில்லை” என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சியினர் உ.பி. அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், உ.பி.சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பேசியதாவது: திரிவேணி சங்கம நீர் புனித நீராடுவதற்கு தகுதியானது. ஆனால் அதில் பாக்டீரியா கலந்திருப்பதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறி, மகா கும்பமேளாவை சிறுமைப்படுத்த சிலர் விஷம பிரச்சாரம் செய்து வருகின்றனர். சனாதன தர்மத்துக்கு எதிராக சிலர் போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கங்கை தாய், மகா கும்பமேளா விவகாரத்தில் வதந்தி பரப்புவது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையுடன் விளையாடும் செயல் ஆகும்.

இந்த நிகழ்ச்சிக்கு எந்த ஒரு கட்சியோ அரசோ ஏற்பாடு செய்யவில்லை. சமூக அமைப்புகள் இந்த விழாவை நடத்துகின்றன. அதற்கு தேவையான வசதிகளை மட்டுமே மாநில அரசு செய்து தருகிறது. இந்த நூற்றாண்டில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது எங்கள் அரசுக்கு கிடைத்த பாக்கியம் ஆகும். போலி பிரச்சாரங்களை முறியடித்து, இந்தியர்கள் மட்டுமல்லாது உலக மக்களும் இந்த விழாவை சிறப்பித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.