EBM News Tamil
Leading News Portal in Tamil

பாதி விலை ஸ்கூட்டர் மோசடி: கேரளாவில் அமலாக்கத் துறை சோதனை | Enforcement Directorate raids in Kerala


பாதி விலை ஸ்கூட்டர் மோசடி தொடர்பாக கேரளாவின் 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

கேரளாவின் இடுக்கி பகுதியை சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன் (26). இவர் கடந்த 2022-ம் ஆண்டில் தன்னார்வ தொண்டு அமைப்பை தொடங்கினார். கேரளா முழுவதும் சுமார் 170 தன்னார்வ தொண்டு அமைப்புகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய கூட்டமைப்பை உருவாக்கினார்.

பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியை (சிஎஸ்ஆர்) பெற்று பொதுமக்களுக்கு பாதி விலையில் ஸ்கூட்டர், லேப் டாப், தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்படும் என்று அனந்து கிருஷ்ணன் வாக்குறுதி அளித்தார்.

அதாவது ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டர் ரூ.60,000-க்கு வழங்கப்படும். ரூ.60,000 மதிப்புள்ள லேப்டாப் ரூ.30,000-க்கு வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். இதை நம்பிய பொதுமக்கள், அனந்து கிருஷ்ணன் தொடர்புடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணத்தை செலுத்தி முன்பதிவு செய்தனர். கடந்த 3 ஆண்டுகளாக கேரளா முழுவதும் அனந்து கிருஷ்ணன் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக பணத்தை வசூல் செய்து மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மோசடி தொடர்பாக கேரள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே மோசடி குறித்து அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது.

மோசடிக்கு மூளையாக செயல்பட்ட அனந்து கிருஷ்ணன், சாய் கிராமம் குளோபல் அறக்கட்டளை தலைவர் ஆனந்த் குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் லாலி வின்சென்ட் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கொச்சி உட்பட கேரளாவின் பல்வேறு நகரங்களில் 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அனந்து கிருஷ்ணனின் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.450 கோடிக்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்று இருக்கிறது. அவர் மக்களிடம் இருந்து எவ்வாறு பணம் வசூல் செய்தார். அந்த பணத்தை எங்கெல்லாம் முதலீடு செய்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பல்வேறு இடங்களில் நிலங்கள் வாங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது கேரளாவின் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அனந்து கிருஷ்ணன் நன்கொடைகளை வழங்கி உள்ளார். பினாமி பெயர்களில் அவர் நன்கொடைகளை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள். இவ்வாறு அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.