EBM News Tamil
Leading News Portal in Tamil

பிரான்ஸ், அமெரிக்கப் பயணம்: டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி | PM Modi embarks on 4-day visit to France, US


புதுடெல்லி: பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா செல்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார்.

முன்னதாக அவர் வெளியிட்டுள் அறிக்கையில், “அடுத்த சில நாட்கள் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளேன். பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் அழைப்பின் பேரில், பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்சுக்குச் செல்கிறேன். பாரிஸில், உலகத் தலைவர்கள் மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூட்டமான AI உச்சிமாநாட்டிற்கு இணை தலைமை தாங்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அங்கு பரந்த பொது நன்மைக்காக ஒருங்கிணைந்த, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் AI தொழில்நுட்பத்திற்கான கூட்டு அணுகுமுறை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.

எனது நண்பர் அதிபர் மக்ரோன் உடனான இருதரப்பு பேச்சுவார்த்தை, இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மைக்கான 2047 ஹாரிசன் எதிர்கால திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும். வரலாற்று சிறப்புமிக்க பிரெஞ்சு நகரமான மார்செல்லியில் இந்தியாவின் முதல் துணை தூதரகத்தை தொடங்கி வைக்க இருக்கிறேன்.

பிரான்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக உள்ள சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலை திட்டத்தை நாங்கள் பார்வையிடுவோம். முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு மசார்குஸ் போர் கல்லறையில் அஞ்சலி செலுத்துவேன்.

பிரான்சிலிருந்து, அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அழைப்பின் பேரில் அமெரிக்காவுக்கு இரண்டு நாள் பயணமாகச் செல்கிறேன். எனது நண்பர் ட்ரம்பை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றியை பெற்று ட்ரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து இது எங்கள் முதல் சந்திப்பாக இருந்தாலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு விரிவான உலகளாவிய கூட்டாண்மையை உருவாக்குவதில் அவரது முதல் பதவிக்காலத்தில் இணைந்து பணியாற்றியதை மிகுந்த அன்புடன் நினைவில் வைத்திருக்கிறேன்.

எனது இந்த பயணம், ட்ரம்ப்பின் முதல் பதவிக்காலத்தில் ஏற்பட்ட ஒத்துழைப்பின் வெற்றிகளைக் கட்டியெழுப்பவும், தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் விநியோகச் சங்கிலி உள்ளிட்ட துறைகளில் நமது கூட்டாண்மையை மேலும் உயர்த்தவும் ஆழப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும். நமது இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம், மேலும் உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்போம்.” என தெரிவித்துள்ளார்.