27 ஆண்டுக்கு முன் மாயமானவர் மகா கும்பமேளாவில் அகோரியாக கண்டுபிடிப்பு: டிஎன்ஏ சோதனை நடத்த குடும்பத்தினர் கோரிக்கை | Jharkhand family finds lost member after 27 years, now an Aghori monk at Maha Kumbh
ராஞ்சி: ஜார்க்கண்டில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனவர், மகா கும்பமேளா பகுதியில் அகோரியாக வாழ் வதை அவ ரது குடும்பத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள புலி பகுதியில் வசித்தவர் கங்காசாகர் யாதவ் (65). கடந்த 27 ஆண்டுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கங்காசாகரை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்துள்ளனர். அவர் தற்போது அகோரி சாதுவாக சாத்வியுடன் வாழ்ந்து வருகிறார்.
அவருக்கு மனைவி தன்வா தேவி என்ற மனைவி, விமலேஷ், கமலேஷ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இதுகுறித்து விமலேஷ் கூறியதாவது: மகா கும்பமேளாவுக்கு சென்ற உறவினர்கள், எங்கள் தந்தை போல் இருக்கும் ஒரு அகோரியை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். அவரது புகைப்படத்தையும் அனுப்பினர். பின்னர் அம்மா, தம்பி மற்றும் உறவினர்களுடன் கும்பமேளா பகுதிக்கு சென்று தேடினோம். ஒரு வழியாக அவரை கண்டுபிடித்தோம். அவர்தான் எங்கள் தந்தை என்பதை அம்மாவும் உறுதியாக கூறுகிறார். ஆனால், வீட்டுக்கு அழைத்தால் வர மறுக்கிறார். எங்களை அடையாளம் தெரியாதது போல் நடந்து கொள்கிறார்.
மகா கும்பமேளா முடிந்த பிறகு எங்கள் தந்தையை மீட்க, மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். இதுகுறித்து தன்பாத் போலீஸ் துணை ஆணையரிடம் மனு அளித்திருக்கிறோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு விமலேஷ் கூறினார். தற்போது கங்காசாகர் அகோரி சாதுவாக வாழ்கிறார். அவருடைய பெயர் பாபா ராஜ்குமார் அகோரி என்கிறார். மனைவி தன்வா தேவி உட்பட உறவினர்கள் யாரையும் தெரியாது என்கிறார். ஆனால், அவருடைய நீள பற்கள், நெற்றியில் தழும்பு போன்ற அடையாளங்களை வைத்து கங்காசாகர்தான் என்று உறவினர்கள் உறுதியாக கூறுகின்றனர்.
இதுகுறித்து தன்வா தேவி கூறியதாவது: என் கணவர் கங்காசாகர் கடந்த 1998-ம் ஆண்டு எங்களை விட்டு சென்ற போது நான் கருவுற்றிருந்தேன். அப்போது மூத்த மகனுக்கு 2 வயதுதான்.அவரைப் பார்த்ததும் நான் அடையாளம் கண்டுகொண்டேன். ஆனால், அவர் தெரியாதது போல் நடிக்கிறார். இவ்வாறு தன்வா தேவி கூறினார். இந்நிலையில், தன்வா தேவி, மகன்கள், உறவினர்கள் பலர் மகா கும்பமேளா பகுதியிலேயே முகாம்களில் தங்கி உள்ளனர். அவரை சமாதானப்படுத்தி அழைத்து செல்ல முடிவெடுத்துள்ளனர்.