மகாத்மா காந்தியின் 77-வது நினைவு நாளில் குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி மரியாதை | President Murmu, PM Modi lead nation in paying tributes to Mahatma Gandhi
மகாத்மா காந்தியின் 77-வது நினைவு நாளில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் நேற்று மரியாதை செலுத்தினர்.
நாட்டின் தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், மனோகர்லால் கட்டார் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “மகாத்மா காந்தியின் புண்ணிய திதி நாளில் மரியாதை செலுத்துகிறேன். அவருடைய கொள்கைகள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.