டெல்லி மெட்ரோ ரயிலில் தவறவிட்ட ரொக்கம், செல்போன், நகைகளை பயணிகளிடம் ஒப்படைத்த சிஐஎஸ்எப் | 89 laptops, 193 mobiles, 40 lakh cash left by passengers in Delhi Metro in 2024
கடந்த 2024-ம் ஆண்டில் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது தவறவிட்ட பொருட்களை மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எப்) உரிய விசாரணைக்குப் பிறகு அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 2024-ம் ஆண்டு டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது தவறவிட்ட பயணிகளின் உடமைகள் உரிய விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.40.74 லட்சம் ரொக்கம், 89 லேப்டாப், 193 செல்போன்கள், 40 வாட்ச், 9 மங்கள்சூத்ரா எனப்படும் திருமணமானவர்கள் அணியும் நெக்லஸ், 13 ஜோடி கொலுசு, வெள்ளி பாத்திரங்கள், வளையல்கள் போன்ற தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பயணிகள் தவறவிட்ட பல்வேறு பொருட்களை சிஐஎஸ்எப் உரியமுறையில் விசாரணை மேற்கொண்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளது.
இதுதவிர, அமெரிக்க டாலர், சவுதி ரியால் உள்ளிட்ட ரூ.24,550 மதிப்புள்ள கரன்சிகளும் கடந்தாண்டில் டெல்லி மெட்ரோ ரயிலில் கண்டெடுக்கப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், டெல்லி மெட்ரோ ரயில் நெட்வொர்க்கில் 59 தற்கொலை முயற்சிகள் நடந்துள்ளன. இதில், 23 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயங்களுடன் உயிர்தப்பினர். 3 பேர் எந்தவித பாதிப்புமின்றி காப்பாற்றப்பட்டனர்.
கடந்த 2024-ல் பயணிகளிடம் நடத்திய பாதுகாப்பு சோதனையின்போது மொத்தம் 75 தோட்டாக்கள் மற்றும் ஏழு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.