EBM News Tamil
Leading News Portal in Tamil

உ.பி.யில் கள்ளநோட்டு அச்சடித்த மதரஸா மேலாளர் கைது | Madrasa manager arrested for printing fake currency in UP


உத்தர பிரதேசத்தில் கள்ளநோட்டு அச்சடித்து, தனது 3 மனைவிகள் மூலம் புழக்கத்தில் விட்ட மதரஸா மேலாளரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

உத்தர பிரதேசம் சிராவஸ்தி பகுதியைச் சேர்ந்தவர் நூரி என்ற முபாரக் அலி. இவர் இங்குள்ள மதரஸா ஒன்றில் மேலாளராக பணியாற்றுகிறார். இவருக்கு 3 மனைவிகள். அதில் ஒருவர் மதரஸாவில் பணியாற்றுகிறார். இந்நிலையில் மதரஸாவின் ஒரு அறையில் கள்ள நோட்டுக்களை நூரி அச்சிட்டுள்ளார். கள்ளநோட்டுகளை தனது மனைவிகள் மூலமாக அருகில் உள்ள மார்க்கெட் பகுதியில் புழக்கத்தில் விட்டுள்ளார்.

இது குறித்து தகவல் திரட்டிய போலீஸார் மதராவில் சோதனை நடத்தினர். அங்கு கள்ள நோட்டுகள் 34,500 மற்றும் நல்ல நோட்டுக்கள் 14,500 ஆகியவை இருந்தன. மேலும் கள்ள நோட்டுக்கள் அச்சிட பயன்படுத்தப்பட்ட 2 லேப்டாப்கள், ஒரு பிரின்டர் அதற்கான மை கேட்ரிட்ஜ் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த கள்ள நோட்டுக்கள் அச்சிடவும், புழக்கத்தில் விடவும் நூரிக்கு ஜமீர் அகமது, தரம்ராஜ் சுக்லா, ராம்சேவக் மற்றும் அவதேஷ் குமார் பாண்டே ஆகியோர் உதவியுள்ளனர். அவர்களையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து சிராவஸ்தி எஸ்.பி ஞான ஷியாம் கூறுகையில், ‘‘கள்ள நோட்டு கும்பல் தலைவனாக நூரி செயல்பட்டுள்ளார். அவர் மீது கோண்டா, பாரைச் மற்றும் மால்ஹிபூர் ஆகிய இடங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.25,000 பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. கள்ள நோட்டு கும்பலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதான என நாங்கள் விசாரித்து வருகிறோம்’’ என்றார்.