நாக்பூரில் 2 நிமிடம் தாமதமானதால் காங்கிரஸ் முன்னாள் பிரமுகரின் வேட்பு மனுவை ஏற்க மறுத்த தேர்தல் அதிகாரி | Congress veteran limps his way to file papers in Nagpur, but misses deadline by 2 mins
நாக்பூர்: மகாராஷ்டிராவில் 2 நிமிடம் தாமதமானதால் காங்கிரஸ் முன்னாள் பிரமுகர் வேட்பு மனுவை ஏற்க தேர்தல் அதிகாரி மறுத்துவிட்டார்.
மகாராஷ்டிர காங்கிரஸின் மூத்த தலைவரான அனீஸ் அகமது அக்கட்சியில் சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக டெல்லி, உத்தராகண்ட் மற்றும் இமாச்சல பிரதேச காங்கிரஸின் பொறுப்பாளராக இருந்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸிலிருந்து விலகினார். பின்னர் பிரகாஷ் அம்பேதகர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி (விபிஏ) கட்சியில் சேர்ந்தார். இதையடுத்து, நாக்பூர் மத்திய தொகுதியில் அனீஸ் அகமது போட்டியிட விபிஏ வாய்ப்பு வழங்கியது. ஆனால் மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் 2 நிமிடம் தாமதமாக சென்றதால் அவரது வேட்பு மனுவை ஏற்க தேர்தல் அதிகாரி மறுத்துவிட்டார்.
இதுகுறித்து அனீஸ் அகமது கூறும்போது, “மனு தாக்கலுக்கு 2 நாட்கள் உள்ள நிலையில் நான் வேறு கட்சியில் சேர்ந்தேன். இதனால் பல்வேறு சான்றுகளை வாங்குவது, வங்கிக் கணக்கு தொடங்குவது உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டியிருந்தது. அத்துடன் தேர்தல் அலுவலகத்துக்கு (மாவட்ட ஆட்சியர்) செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாமல் 2 நிமிடம் தாமதமாகி விட்டது. இதனால் என்னுடைய மனுவை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்துவிட்டார். நான் என்னுடைய பிரச்சினைகளை எடுத்துக் கூறியும் அதை அவர் ஏற்கவில்லை” என்றார்.
மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் மதியம் 3 மணியுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.