EBM News Tamil
Leading News Portal in Tamil

“இரண்டு, மூன்று கோடீஸ்வரர்களுக்கு உதவவே பாஜக அரசு நடத்தப்படுகிறது” – ராகுல் குற்றச்சாட்டு | BJP government is run to help 2-3 millionaires says Rahul Gandhi


சோனிபட் (ஹரியானா): நாட்டின் இரண்டு, மூன்று கோடீஸ்வரர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே பாஜக அரசு நடத்தப்படுகிறது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சோனிபட் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “நாட்டில், குறிப்பாக ஹரியானாவில் சிறுதொழில்கள் நலிந்துவிட்டதாக மக்கள் கூறுகிறார்கள். ஹரியானா அரசும் நரேந்திர மோடியும் சிறு தொழில் செய்பவர்களை நாசப்படுத்திவிட்டனர். பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டியை அமல்படுத்தி வங்கிகளின் கதவுகளை நரேந்திர மோடி மூடிவிட்டார். அவர்கள் அதானி-அம்பானிக்கு மட்டுமே நன்மை செய்ய விரும்புகிறார்கள். இன்று இரண்டு, மூன்று கோடீஸ்வரர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே பாஜக அரசு நடத்தப்படுகிறது என்பது நாடு முழுவதும் தெரியும்.

ஹரியானா மக்கள் ராணுவத்தில் சேர்வது வழக்கம். ஆனால், நரேந்திர மோடி ‘அக்னிவீர் திட்டம்’ கொண்டு வந்ததன் மூலம் இந்த பாதையையும் மூடிவிட்டார். அக்னிவீர் திட்டம் என்பது இந்திய வீரர்களிடமிருந்து ஓய்வூதியம், கேன்டீன் மற்றும் தியாகி அந்தஸ்து ஆகியவற்றை திருடுவதற்கான ஒரு வழியாகும். ஹரியானாவில் போதைப்பொருள் பிரச்சினை அதிகரித்து வருகிறது. நான் நரேந்திர மோடியிடம் கேட்க விரும்புகிறேன், அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கிலோ போதைப்பொருள் சிக்கியபோது, ​​நீங்கள் யாரைப் பிடித்தீர்கள், யாரை சிறைக்கு அனுப்பினீர்கள்?

ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஒரு சிலிண்டர் ரூ.500-க்கு கிடைக்கும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 25 லட்சம் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சைப் பெற்றுக்கொள்ளும் வகையில் காப்பீடு வழங்கப்படும். பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,000 வழங்கப்படும்.

இந்தியாவின் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு என்ன கிடைத்ததோ அது அரசியலமைப்பின் பரிசு. ஆனால் பாஜக எப்போதும் அரசியல் சாசனத்தை தாக்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நாட்டின் நிறுவனங்களை தங்கள் சொந்த மக்களைக் கொண்டு நிரப்புகிறார்கள். ​​ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடம் கொடுக்காமல் அவர்கள் அரசியல் சாசனத்தைத் தாக்குகிறார்கள். அரசியல் சாசனத்தை பாஜக அழித்துவிட்டது. அரசியலமைப்பை நாங்கள் பாதுகாக்கிறோம்” என தெரிவித்தார்.

ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது.