ஜம்மு காஷ்மீர் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 11.6% வாக்குகள் பதிவு | J-K Assembly polls: 11.60 pc turnout recorded till 9 am in third phase of polls
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்று வரும் 3-வது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 11.6% வாக்குப்பதிவாகியுள்ளது. தேர்தல் ஆணையத் தரவுகளின்படி உத்தம்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 14.2%, அடுத்ததாக சம்பா மாவட்டத்தில் 13.3% வாக்குப் பதிவாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 18-ம் தேதி 24 தொகுதிகளுக்கும், 25-ம் தேதி 26 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்ற நிலையில், 3-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் 40 தொகுதிகளுக்கு இன்று (அக்.1) காலை 7 மணிக்குத் தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 11.6% வாக்குப்பதிவாகியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.
415 வேட்பாளர்கள்: தேர்தல் களத்தில் 415 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் 17 பேர் முன்னாள் அமைச்சர்கள், 8 பேர் முன்னாள் எம்எல்ஏக்கள், 4 பேர் விருப்ப ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள். 3-வது கட்ட தேர்தலில் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 5,060 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.