EBM News Tamil
Leading News Portal in Tamil

இளம் ஊழியர்கள் நலனில் கவனம் தேவை: பெண் ஊழியர் உயிரிழப்பு; அஜித் பவார் கருத்து | work stress female employee dead Ajit Pawar says attention needed


மும்பை: புனேவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய தனது 26 வயது மகள் பணிச்சுமையால் உயிரிழந்ததாக பாதிக்கப்பட்ட தாய் எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் கவனம் தேவை என மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

“பணிச்சுமையால் பெண் ஊழியர் உயிரிழந்த செய்தி அறிந்து வருந்துகிறேன். அதீத பணிச்சுமையால் இளம் வயதினர் உயிரிழக்கும் விவகாரத்தில் கவனம் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் எர்ன்ஸ்ட் அண்ட் யங் இந்தியா நிறுவனம் சரியான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என மத்திய தொழிலாளர் நலன் இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தெரிவித்திருந்தார்.

“இரவு 12.30 மணி வரை எனது மகள் பணியாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டார். நாங்கள் வேலையை விடுமாறு தெரிவித்தோம். ஆனால், இது தனக்கு தொழில்முறை ரீதியான அனுபவத்தை பெற உதவும் என சொல்லி மறுத்துவிட்டார். பணிச்சுமை குறித்து அவள் பணியாற்றிய நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என உயிரிழந்த பெண் ஊழியரின் தந்தை சிபி ஜோசப் தெரிவித்துள்ளார்.