அரசு திட்டங்களை விரைந்து அமல்படுத்த வேண்டும்: பாஜக முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல் | pm modi advise to bjp CMs
புதுடெல்லி: அரசின் நலத்திட்டங்களை விரைவாக அமல்படுத்த வேண்டும் என பாஜக முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்து 3-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைந்த பிறகு, முதல் முறையாக பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்றுநடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, திரிபுரா முதல்வர் மாணிக் சாகா, மத்திய பிரதேச முதல்வர் மோகன் குமார் யாதவ், மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், அருணாச்சல பிரதேச முதல்வர் பேமா காண்டு மற்றும் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், உத்த பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, நாகாலாந்து துணை முதல்வர் ஒய்.பட்டோன், பிஹார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய்குமார் சின்ஹா மற்றும் ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரி உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மாநில அரசுகள்தாங்கள் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தன. மேலும் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு, அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் குழாய் இணைப்பு உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறிப்பாக சில மாநிலங்களில் பின்னடைவு ஏற்பட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “அரசின் நலத்திட்டங்களை விரைவாக அமல்படுத்த வேண்டும். இதன்மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும். 2047-ம்ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா (விக்சித் இந்தியா) இலக்கை எட்ட, மாநிலங்கள் வளர்ச்சி அடைய வேண்டியது அவசியம்” என்று வலியுறுத்தினார்.