பிரதமருடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்திப்பு | Jharkhand cm Hemant Soren meets Prime Minister modi
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று சந்தித்துப் பேசினார். இதுகுறித்து பிரதமர் அலுவல கம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜூலை 13 -ம் தேதி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவி கல்பனா சோரனை டெல்லியில் அவர்களது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியையும் ஹேமந்த் சோரன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
காங்கிரஸும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் (ஜேஎம்எம்) இ்ந்தியா கூட்டணியில் இடம்பெற்று மக்களவைத் தேர்தலில் ஒன்றாக போட்டியிட்டன.இந்த தேர்தலில் பழங்குடியினர் ஆதிக்கம் நிறைந்த ஜார்க்கண்ட்டில் சோரனின் ஜேஎம்எம் கட்சி மூன்று இடங்களில் வெற்றி பெற்றது.
ஜார்க்கண்ட் முதல்வராக சோரன் மூன்றாவது முறையாக பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகு ஜூலை 8-ம் தேதி மாநில சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வின்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றிபெற்றார். இந்த வாக்கெடுப்பில் சோரனுக்கு ஆதரவாக 45 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
நில மற்றும் பண மோசடி குற்றச்சாட்டின்பேரில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரி 31-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனால், அதற்கு முன்பாகவே அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் சோரனுக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து ஜூன் 28-ம் தேதி பிர்சா முண்டா சிறையில் இருந்து சோரன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.