பழங்குடியினர் ஆணைய ஊழல் விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி | Karnataka cm Siddaramaiah in pressure over Tribal Commission scam
பெங்களூரு: கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் நடந்த ஊழல் விவகாரத்தில், மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ரூ.187.3 கோடி ஊழல் நடந்ததாக அதன் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் குற்றம்சாட்டினார்.
மேலும் அந்த ஊழலுக்கு உடந்தையாக இல்லாததால் தனக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், கடந்த மே மாதம் தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநாபா, தலைமை கணக்காளர் பரசுராம், யூனியன் வங்கியின் எம்.ஜி.சாலை கிளை மேலாளர் சுஷ்சிதா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.14.5 கோடி பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் நாகேந்திரா, ரெய்ச்சூர் காங்கிரஸ் எம்எல்ஏவும், பழங்குடியினர் ஆணையத்தின் தலைவருமான பசனகவுடா தட்டல், நாகேந்திராவின் உதவியாளர் ஹரீஷ் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து நாகேந்திராவை கைது செய்த அவர்கள், அவரிடம் 13 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
பாஜகவினர் ஆர்ப்பாட்டம்: இந்த ஊழலை கண்டித்து கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா தலைமையில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது அசோகா பேசும்போது, ‘‘சித்தராமையாவின் ஆட்சியில் பழங்குடியினரின் நிதி கொள்ளையடிக்கப்பட் டுள்ளது. ரூ.187 கோடியை கொள்ளையடித்த அரசுக்கு பட்டியலின, பழங்குடியின மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். இந்த ஊழலில் சித்தராமையாவுக்கு பங்கு இருப்பதால்தான் அவர் அமைதியாக இருக்கிறார். இந்த விவகாரத்தில் அவர் வெளிப்படையாக பேச வேண்டும்” என்றார்.
ராஜினாமா செய்ய வேண்டும்: இதற்கிடையே, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறும்போது, ‘‘பழங்குடியினர் ஆணையத்தில் நடைபெற்ற ஊழலில் முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில் இருந்த நாகேந்திராவுக்கு நேரடி தொடர்பு இருக்கிறது. அதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். சித்தராமையாவுக்கு தெரியாமல் இந்த ஊழல் நடந்திருக்காது. ஏனென்றால், நிதித்துறை அவரது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவருக்கு தெரிந்தே இந்த ஊழல் நடந்திருக்கிறது. எனவே, இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.