EBM News Tamil
Leading News Portal in Tamil

பருவமழை அப்டேட்- மகாராஷ்டிரா, கோவா, கேரளாவுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் | Monsoon update: Red alert for Goa, Kerala, Maharashtra: India Meteorological Department


புதுடெல்லி: மகாராஷ்டிரா, கோவா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இந்திய வானிலை மைய தகவலின்படி, தென்மேற்கு பருவமழையானது கீழ்நோக்கி நகர்ந்து மகாராஷ்டிரா, கோவா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் கடலோரங்களில் இந்த வாரம் நிலைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் வரும் நாட்களில் மிக கனமழை முதல் இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

கேரளாவின் மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்டும், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்தப் பகுதிகளில் 20 செ.மீ வரை மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. தொடர் மழை மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து கோவாவில் பள்ளிகளுக்கும், கேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தைப் பொறுத்தவரை சதாரா, கோலாப்பூர், சிந்துதுர்க் மற்றும் ரத்னகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மும்பை மாநகரில் கனமழை வெளுத்துவாங்கி சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் எனத் தெரியவருகிறது. இதுதவிர தலைநகர் டெல்லி, நொய்டா ஆகிய பகுதிகளிலும் லேசான மழைப்பொழிவு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை மைய அதிகாரி நரேஷ் குமார், “பருவமழையானது கீழ் நோக்கி நகர்கிறது. வரும் நாட்களில் கடலோர கர்நாடகா, கேரளா மற்றும் கோவாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். இந்த மாநிலங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யக்கூடும். டெல்லி- நொய்டா பகுதிகளில் வரும் நாட்களில் லேசான மழை பெய்யும். டெல்லிக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை.” என்று கூறியுள்ளார்.