EBM News Tamil
Leading News Portal in Tamil

சிபிஐ விசாரணை | மத்திய அரசுக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மனு விசாரணைக்குரியதே – உச்ச நீதிமன்றம் | CBI investigation West Bengal Govt’s Petition Against Central Govt maintainable – Supreme Court


புதுடெல்லி: மாநிலத்தின் அதிகார வரம்புக்குள் மத்திய புலனாய்வு அமைப்பு அல்லது சிபிஐ விசாரணைக்கு அனுமதிக்கும் மத்திய அரசின் உத்தரவினை எதிர்த்து மேற்குவங்க அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்குரியதே என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் சந்தீப் மேதா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒப்புதலைத் திரும்பப் பெற்றாலும், சிபிஐ விசாரணைக்கு எதிரான மேற்கு வங்க மாநிலத்தின் மனு அதன் சொந்த தகுதியில் விசாரணைக்கு உகந்ததே என்று தெரிவித்தது. மேலும் இதன் விசாரணையை ஆகஸ்ட் 13- ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மத்திய அரசின் விசாரணை அமைப்பான சிபிஐ, மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதற்கும், சோதனைகள் மேற்கொள்வதற்கும் வழங்கப்பட்டிருந்த பொது அனுமதியை மேற்கு வங்க மாநிலம் 2018, நவம்பர் 18-ம் தேதி திரும்பப் பெற்றது. என்றாலும் மாநிலத்தின் எல்லைக்குள் விசாரணை மேற்கொள்வதையும், வழக்குகள் பதிவு செய்வதையும் எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.

மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை கடந்த மே 8ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. விசாரணையின் போது, மேற்கு வங்க அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “2018, நவ.18ம் தேதி சிபிஐ விசாரணைக்கான பொது அனுமதியை மாநில அரசு திரும்பப் பெற்றதும் மத்திய அரசு மாநில எல்லைக்குள் விசாரணைக்கு அனுமதி அளிக்க முடியாது” என்று வாதிட்டார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா,”மாநில அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ள வழக்குகள், மத்திய அரசால் பதிவு செய்யப்படவில்லை. மத்திய அரசு எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. அவற்றை சிபிஐ பதிவு செய்துள்ளது. சிபிஐ என்பது இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை” என்று தெரிவித்தார்.

மேலும், மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததா என்று ஆட்சேபனை எழுப்பிய மத்திய அரசு, தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்திருந்தது.

முன்னதாக, அரசியல் சாசன பிரிவு 131-ன் கீழ் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ‘மேற்கு வங்க மாநிலம், அதன் மாநில எல்லைக்குள் மத்திய அரசின் விசாரணை அமைப்பு வழக்கு விசாரணை மேற்கொள்வதற்கான பொது அனுமதியை திரும்பப் பெற்ற பின்னரும், சிபிஐ தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்து விசாரணைகள் நடத்தி வருகிறது’ என்று குற்றம்சாட்டியிருந்தது.

அரசியல் சாசனத்தின் பிரிவு 131 என்பது மத்திய அரசுக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலத்துக்கும் இடையில் ஏற்படும் பிரச்சினைகளை விசாரிப்பதற்கான உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பைப் பற்றி கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.