EBM News Tamil
Leading News Portal in Tamil

உத்தரப்பிரதேசம் | பால் வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 18 பேர் பலி | speeding bus rams milk tanker in Uttar Pradesh’s Unnao 18 killed


லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ்-ல் உள்ள லக்னோ – ஆக்ரா விரைவுச் சாலையில் வேகமாக வந்த இரண்டடுக்கு பேருந்து, பால்வேன் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர், 19 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து உன்னோவ் மாவட்ட ஆட்சியர் கவுரங் ரதி கூறுகையில், “அந்தப் பேருந்து பிஹார் மாநிலம் மோதிகரியில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. கார்ஹா கிராமம் அருகே நின்று கொண்டிருந்த பால் வண்டி மீது பின்னால் இருந்து பேருந்து மோதியது. இதனால் பேருந்திலிருந்த பயணிகள் வெளியே தூக்கி வீசப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. முதல் கட்ட விசாரணையில் பேருந்து வேகமாக வந்ததே விபத்துக்குக் காரணம் என்று தெரியவந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

விபத்து நடந்த இடத்தில் போலீஸார் மற்றும் அவசர கால பணியாளர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வெளியான வீடியோ காட்சிகளில் சாலைகளில் உடல்களும், உடைந்து போன பேருந்து பாகங்கள், கண்ணாடித் துண்டுகள் போன்றவையும் சிதறி கிடப்பதைக் காணமுடிகிறது.

இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தினையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்து பகுதியில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண பணிகளை மேற்பார்வையிட சம்பவ இடத்துக்குச் சென்றுள்ள மாநில துணை முதல்வர் பரஜேஷ் பதக், “காயமடைந்தவர்கள் பெரும்பாலும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், பிஹார் அரசுடன் உத்தர பிரதேச அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. காயமடைந்தவர்கள் உயர்நிலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உன்னாவ்-க்கு அருகில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் தயாசங்கர் சிங், “விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.