EBM News Tamil
Leading News Portal in Tamil

சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: டெல்லியில் பெண் மருத்துவர் உட்பட 7 பேர் கைது | Illegal organ transplants: 7 arrested


புதுடெல்லி: சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக பெண் மருத்துவர் உட்பட 7 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

வங்கதேசம் மற்றும் டெல்லியில் சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதாக டெல்லி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடந்த 2 மாதங்களாக போலீஸார் இது தொடர்பான தகவல்களை திரட்டினர். இந்நிலையில், இது தொடர்பாக பெண் மருத்துவர் உட்பட 7 பேரை டெல்லி குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி காவல் ஆணையர் அமித் கோயல் கூறும்போது, “சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விவகாரத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் மூளையாக செயல்பட்டுள்ளார். உடல் உறுப்பு தானம்செய்தவர்களும் தானம் பெற்றவர்களும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

3 மருத்துவமனைகளுடன் தொடர்பு: போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதற்காக ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வசூலித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மருத்துவர் 2 அல்லது 3 மருத்துவமனைகளுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்.

உறுப்பு தானம் செய்தவரும் பெற்றவரும் ரத்த சொந்தங்கள் இல்லை என தெரிந்திருந்தும் அந்த மருத்துவர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால், இந்த மோசடியில் அவருக்கும் தொடர்பு உள்ளதாக வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்றார்.

இந்தியாவின் மனித உடல் உறுப்பு மாற்று சட்டத்தின்படி, பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே உடல் உறுப்புகளை தானம் வழங்கவோ, பெறவோ முடியும்.

இந்தியாவில் வசிப்போர் தனதுரத்த சொந்தம் அல்லாத வெளிநாட்டவருக்கு உறுப்பு தானம் வழங்கமுடியாது. இந்நிலையில், சட்டத்துக்கு புறம்பாக டெல்லியில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.