EBM News Tamil
Leading News Portal in Tamil

உத்தராகண்டில் வேன் கவிழ்ந்து 14 பேர் உயிரிழப்பு, 12 பேர் காயம்: குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல் | 14 dead after vehicle with 26 passengers falls into gorge in Uttarakhand


டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ் – பத்ரிநாத் நெடுஞ்சாலையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர், 12 பேர் காயம் அடைந்தனர்.

டெல்லியிருந்து ஒரு டெம்போ வேனில் சுற்றுலா பயணிகள் 26 பேர், உத்தராகண்ட்டுக்கு கடந்த வெள்ளிக் கிழமை இரவு புறப்பட்டனர். அந்த வேன் உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபியாக் மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ் – பத்ரிநாத் நெடுஞ்சாலையில், நேற்று காலை சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது. ராய்தொலி என்ற இடத்தில் அந்த வேன் கட்டுப் பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழந்து, அருகில் உள்ள அலக்நந்தா ஆற்றங்கரையில் நொறுங்கி கிடந்தது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்து நடைபெற்ற இடத்தில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என பேரிடர் மீட்பு குழு கமாண்டன்ட் மணிகன்ட் மிஸ்ரா தெரிவித்தார்.

இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது: ருத்ரபிரயாக் சாலை விபத்தில் காயம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தப்பட் டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யும். இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு புஷ்கர் சிங் தாமி கூறினார்.

ரூ. 2 லட்சம் இழப்பீடு: இந்த விபத்தில் உயிரிழந் தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எக்ஸ் தளத்தில் கவலை தெரிவித்துள்ளார்.