EBM News Tamil
Leading News Portal in Tamil

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்வீந்தர் சிங் லவ்லி ராஜினாமா | Arvinder Singh Lovely resigns as Delhi Congress chief, cites alliance with AAP


புதுடெல்லி: டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்வீந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை அவர் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பிவைத்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்ததை எதிர்த்து ராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள7 லோக்சபா மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 25 அன்று நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கேஜ்ரிவால் சிறையில் இருக்கிறார். கேஜ்ரிவாலுடன் கூட்டணி வைத்ததற்காக தற்போது மாநில காங்கிரஸ் தலைவர் ராஜினாமா செய்துள்ளார். இவை தேர்தலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது.

அர்வீந்தர் சிங் லவ்லி தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது: டெல்லி காங்கிரஸ் கட்சியானது ஆம் ஆத்மி கட்சியுடன் மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி வைத்ததில் விருப்பமில்லை. காங்கிரஸ் கட்சி மீது போலியான, ஜோடிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி ஆம் ஆத்மி. அப்படியிருந்தும் கூட அத்தகைய கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முடிவு செய்தது. ஆனால் டெல்லி காங்கிரஸில் நான் உள்பட சில மூத்த தலைவர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தோம். எங்கள் அனைவரின் கோரிக்கைகளையும் மேலிடம் ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டது.

நான் கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றேன். ஆனால் அது தொடங்கி இதுவரை காங்கிரஸ் டெல்லி மேலிடப் பொறுப்பாளர் என்னையும், எனது மூத்த சகாக்களையும் எந்தவித முக்கிய முடிவுகளையும் எடுக்கவிடவில்லை. டெல்லி காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவராக ஒரு மூத்த கட்சிக்காரரை நியமிக்க நான் கோரினேன். ஆனால் அது ஏற்கப்படவில்லை. டெல்லியில் கட்சியின் கீழ்நிலைகளில் முக்கியப் பதவிகளுக்கு ஆள் நியமிக்கப்படாமல் இருந்துவருவதை சுட்டிக்காட்டினேன். அதன் மீதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

நான் கட்சியின் முடிவை மதித்தேன். அதனாலேயே பொதுவெளியில் அதை நான் ஆதரித்தேன். மாநில காங்கிரஸ் கட்சி மேலிட உத்தரவை ஏற்று நடக்கும் என்றும் கூறினேன். கேஜ்ரிவால் கைதான இரவுகூட நான் அவரது வீட்டுக்கு எனது சகாக்கள் சுபாஷ் சோப்ரா, சந்தீப் தீக்சித் ஆகியோருடன் சென்றேன். எனது நிலைப்பாட்டுக்கு அது எதிராக இருந்தாலும்கூட கட்சிக்காக நான் சென்றேன். இருப்பினும் ஆம் ஆத்மிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கியது எனக்கு நெருடலாகவே இருந்தது.

வடகிழக்கு டெல்லி வேட்பாளர் கண்ணய்யா குமார் தனது பிரச்சார மேடையில் டெல்லி முதல்வரையும், ஆம் ஆத்மி கட்சியின் கல்வி, சுகாதார மேம்பாடு, சாலை, மின் துறை செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசினார். அது உண்மையல்ல. தேசிய கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கப் பேசப்பட்டவை. அது டெல்லி காங்கிரஸின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் சரியாக சென்று சேரவில்லை. இவ்வாறு அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.